அரசு கலை அறிவியல் கல்லூரி இடமாற்றம்
- புதுவை அருகே கதிர்காமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2001 முதல் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
- தற்போது 1,030 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே கதிர்காமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2001 முதல் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, புள்ளியியல், பி.காம் (அயலகவாணிபம்) பி.சி.ஏ. ஆகிய 5 துறைகள் தொடங்கப்பட்டன. இங்கு தற்போது 1,030 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கல்லூரி, நிர்வாக வசதிக்காக இந்திராநகர் காவலர் பயிற்சி பள்ளிக்கு அருகே உள்ள இந்திராகாந்தி அரசினர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிஷோர் ஜான் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ்
எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. பேசுகையில் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இக்கல்லூரி இங்கு மாற்றப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இக்கல்லூரி புதிய பொலி வுடன், புதிய கட்டிடத்தில் தொடங்கப்படும்.
புதுவையில் சிறந்த கல்லூரியாக செயல்பட்டு இந்திய அளவில் பேசப்படும் இக்கல்லூரி, உலக அளவிலும் பேசப்பட வேண்டும் என்றார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி புள்ளியியல் துறை பேராசிரியர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.