அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்க முன்வர வேண்டும்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
- பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர்.
புதுச்சேரி:
புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைப்பு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவை பழமை மாறாத நகரமாக உள்ளது. நகர பகுதியின் அழகிய கட்டடங்களை பார்வையிட அதிமானவர்கள் வருகின்றனர். புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கு இந்த கட்டடங்களும் ஒரு காரணம். பழமையான கட்டடங்கள் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.
75 கட்டடங்களை இப்போது பராமரித்து வருகிறோம். இதற்காக ரூ.75 லட்சம் வழங்கி வருகிறோம். அவர்களும் பராமரித்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மேரி கட்டடம் புனரமைக்கும்போது இடிந்து விட்டது. அதன் பழமை மாறாமல் கட்டி முடித்துள்ளோம். மிகவும் பழமையான கட்டிடத்தில் வ.உ.சி. பள்ளியும் ஒன்று.
இதை பாதுகாக்க வேண்டியது அரசின் நோக்கம். இந்த பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர். பழமை மாறால் புதுவையின் கட்டடங்கள் பராமரிக்கப்பட வேண்டும், புனரமைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
அதன்படி வ.உ.சி. பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு பள்ளிகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறையாக உள்ளது. அரசு பள்ளிகளை பராமரிக்க, புனரமைக்க, கழிப்பறைகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கி பணிகளை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகள், மருத்துவமனைகளில் பராமரிப்பு ஊழியர்கள் சரியாக பணிகளை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை பராமரிக்க உரிய நிதிஒதுக்கீடு செய்யப்படும். தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சில பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்க முன்வர வேண்டும்.
அரசு பள்ளியில் அதிகளவு மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அரசு வகுத்து செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளோம். கல்வே கல்லூரியும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அழகான புதுவையை மேலும் அழகாக்க வேண்டியது புதுவை மக்களின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.