100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்
- விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் கரிக்கலாம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஏகாம்பரம் தலைமை வகித்தார். ஜி.சுகுணா, எம்.சுகுணா முன்னிலை வகித்தனர்.
வேலை அறிக்கையை நாகராஜ் சமர்பித்தார். சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராம மூர்த்தி, பொதுச்செயலாளர் விஜயபாலன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தொகுதி செயலாளர் பெருமாள், மாநில தலைவர் ராஜா, பாகூர் தொகுதி நாராயணன் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் வழங்கி, நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்தி நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். பணியில் இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும். நத்தமேடு கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். ஏம்பலத்தில் நவீன திருமண மண்டபம் கட்ட வேண்டும். தார்சாலை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.