சந்திரபிரியங்காவுக்கு தயக்கமா?-முன்னாள் எம்.பி. ராமதாஸ் கேள்வி
- புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள்.
- அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கென்று இன்று புதுவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரில் ஒரு தனி அமைச்சர் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார். அவருக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதித் துறை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலை கலாச்சாரத்துறை புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்துறைகளில் மிக முக்கிய துறையும், 16 சதவீதம் உள்ள மக்களை காப்பாற்றும் பொறுப்புடைய துறையும் ஆதிதிராவிடர் நலத்துறை தான்.
எனவே இவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று மட்டுமே அழைக்க வேண்டும்.அம்பேத்கரின் இட ஒதுக்கீடு முறை மூலம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ள பெண்மணி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரை ஏன் கேட்டு வாங்கவில்லை?
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவதில் அவருக்கு ஏதேனும் தயக்கம் உள்ளதா?தமிழகத்தில் மற்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தாலும் அங்கு கயல்விழி செல்வராசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுகிறார். இது ஏன் புதுவையில் நிகழவில்லை?ஆதிதிராவிட மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி திட்டத்தை 1980-ல் இருந்து 2005 வரை சரியாக முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு இந்த மக்களை வஞ்சித்த அரசு இன்றைக்கு இந்த மக்களுக்கென்று ஒரு முதன்மை அமைச்சர் இல்லாமல் செய்து விட்டது வருத்தத்திற்குரியது.
மாநில உரிமைகளுக்கு மாநில அந்தஸ்து கூறும் நமது முதல்-அமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு உரிமை தர வேண்டும் அவர்களுக்கு பெருமை தர வேண்டும் என்று நினைத்தால் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்ற பெயரை நீக்கிவிட்டு பெண் அமைச்சருக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் இது இம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் திட்டங்கள் அனைத்தும் முறையாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.