காலாப்பட்டில் சர்வதேச விளையாட்டு மைதானம்-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது. நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?
- சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நேரு (சுயேட்சை): ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது.நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?
அமைச்சர் நமச்சிவாயம்: உண்மைதான். கடந்த காலங்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை. உடன் நடவடிக்கை எடுக்கிறோம். விளை யாட்டுத்துறைக்கு தனி கவனம் செலுத்துகிறோம். இதுவரை சம்பளம் ஒதுக்கி வந்தோம். தற்போது ஊக்கத்தொகைக்கு ரூ. 8 கோடி ஒதுக்கி தந்துள்ளோம். ஆக்கி மைதானத்துக்கு ரூ. 7.5 கோடி தேவை. நேரடியாக அதற்கு திட்டமதிப்பீட்டை தனியார் நிறுவனம் மூலம் செய்கிறோம்.
ஆக்கி மட்டுல்ல அனைத்து விளையாட்டுகளிலும் இளைஞர்கள் பயிற்சி பெற செய்ய உள்ளோம். சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம். தனியார் பள்ளியில் 16 ஏக்கர் நிலம் உள்ளது. வில்லியனூரில் மினி ஸ்டேடியம் கொண்டு வரவுள்ளோம்.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.: மின்கட்டணம் செலுத்ததால் உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் ஏ.சி. வசதி இயங்கவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்துறையே முழுவதும் சீர்படுத்தியாக வேண்டும். யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். அனைத்தும் சரி செய்யப்பட்டு விளையாட்டு துறை மேம்படுத்தப்படும்.
நேரு: அண்ணாதிடல் ஸ்மார்ட் சிட்டி பணி தேக்கத்தால் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.
அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்திடலாகவே மாற்றவே ஸ்மார்ட் சிட்டியில் நிதி ஒதுக்கி செய்தோம். ஒரு சில வேலைகளால் நிற்கிறது. அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளோம். ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.: கோரிமேடு போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்தி தாருங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்துவோம். விளையாட்டு இயக்குநர் நியமிக்க தனி ஆணை வெளியிட வேண்டும். கல்வித்துறை துணை இயக்குநர் ஒருவரை பணியிடமாற்றம் செய்து விளையாட்டுத்துறைக்கு கொண்டு செல்லவுள்ளோம்.
கொம்யூன்தோறும் விளையாட்டு மைதானம் கொண்டுவருவோம். தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. அடுத்த ஆண்டு கேலோ இந்தியா திட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் உருவா க்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.