காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பில்கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி ரத்து
- நகர அமைப்பு குழும அதிகாரிகள் நடவடிக்கை
- கோவில் இடத்தில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் 2 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்ற வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பதிவாளர் உட்பட 15 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவில் இடத்துக்கு மனை வரைமுறை அனுமதி, அங்கு கட்டப்படும் வீட்டுக்கான அனுமதி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையறிந்து புதுவை நகர அமைப்பு குழும அதிகாரிகளும் அங்க சென்று எந்த வீடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர்.
கோவில் இடத்தில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் 2 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 4 கட்டிடங்களுக்கு நகராட்சி வரி செலுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து நகர அமைப்பு குழும அதிகாரிகள் நகராட்சி வரியை பெற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 2 கட்டிடத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும் நடவடிக்க எடுத்து வருகின்றனர்.
சட்ட ஆலோசனைக்கு பரிந்துரை செய்யாமல், ஆன்லைன் மூலம் நேரடியாக அனுமதி வழங்கியதால் உறுப்பினர் நகர அமைப்பு குழும அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.