இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
- கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
- 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை.
காரைக்கால் :
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் நேற்று திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் தான் நடந்துள்ளது. 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதெல்லாம் கண் துடிப்பு நாடகம். பொதுவாக ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி இருந்தால், அடுத்த முறை வேறொரு ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள். அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை மக்கள் நலன் கருதி படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. என்ன நிலைபாடு, எந்த தொகுதியில் போட்டி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முறைப்படி அறிவிப்பு செய்வோம்.
தமிழகத்தில் கள்ள சாராய சாவு மிகப்பெரிய கொடுமையானது. தி.மு.க.வானது தேர்தல் நேரத்தில் ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கவுன்சிலர்களால் கள்ளச் சாராயம் அதிக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கி வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுத்தது போல் மது மற்றும் கஞ்சா ஒழிப்பிற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சொல்லப் போனால், மது மற்றும் கஞ்சாவிற்கு எதிராக இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா இல்லாத மாநிலமாக புதுச்சேரி, தமிழகத்தை அந்தந்த மாநில கவர்னர்கள் மாற்ற வேண்டும். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் உள்ளார். எந்த நேரத்தில் வெளியே வர வேண்டுமோ அப்போது நிச்சயம் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.