நள்ளிரவு நடன பார்களால் மக்கள்மனஉளைச்சலில் உள்ளனர்-இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
- நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
- நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே நடன பார்களை அரசு திறக்கிறது என பேசியுள்ளார்.
நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், பயந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதுவை அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. தன் தொகுதி மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் பணி நிரந்தர ஆணை வழங்கியுள்ளார். இது நியாயம்தானா? அரசின் அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.