மக்கள் புரட்சியை சந்திக்கும்-ஏ.வி.சுப்ரமணியன் கணிப்பு
- உலக பணக்காரர் வரிசையில் அதானி 4-ம் இடத்துக்கு உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பொருளாளதார வீழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என கூற முடியாது.
- அதானியின் நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வாங்க மத்திய அரசு கட்டாயப்படுகிறது என முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டுகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக பணக்காரர் வரிசையில் அதானி 4-ம் இடத்துக்கு உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பொருளாளதார வீழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என கூற முடியாது. தெலுங்கானாவில் ஒரு டன் நிலக்கரி ரூ.4 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. அதானியின் நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வாங்க மத்திய அரசு கட்டாயப்படுகிறது என முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டுகிறார்.
வர்த்தகத்திலும், தொழில் துறையிலும் வெற்றி பெற்ற இந்தியர்கள், பணக்காரர்கள், நம்நாட்டு குடியுரிமையை வேண்டாம் என கூறிவிட்டு, வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வருகின்றனர். 2020-21-ம் நிதியாண்டில் 1.63 லட்சம் பேர், இந்திய பாஸ்போர்ட் வேண்டாம் என கூறியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான தகவல். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 2014 முதல் 4½ லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் அந்நிய முதலீடுகள் வெளியேறுகிறது, குறைகிறது, அமெரிக்க டாலர் கையிருப்பும் குறைந்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.
இன்னும் ஓராண்டில் கச்சா எண்ணெய் உட்பட இந்தியாவுக்கு அவசியமான எந்த பொருட்களும் இறக்குமதி செய்ய முடியாமல், இலங்கை நிலைக்கு தள்ளப்படும்.
பிறகு மக்கள் புரட்சியை இந்த பா.ஜனதா அரசு சந்திக்க நேரிடும்.
பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அதிலிருந்து வெளியேற திட்டமிடும். புதிய கூட்டணி இல்லாம் பா.ஜனதா தனிமைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.