சீனியாரிட்டி அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
- காவலர் பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
- 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொதுநல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
6-வது சம்பள கமிஷன் உத்தரவு அடிப்படையில் புதுவை காவல் துறையில் 10 வருடம் பணி முடித்த போலீசாருக்கு ஏட்டு பதவியும், 20 வருடம் பணி முடித்த ஏட்டுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் அதுபோல் 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் புதுவை போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று புதுவை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஜனாதிபதியின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு தற்போது புதுவை காவல் துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பணியில் இருக்கும் போலீசாருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் அவர்கள் சிறப்பாக பணி செய்ய முடியாமல் மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10 வருடம் பணிமுடித்த போலீசாருக்கு தலைமை காவலர் (ஏட்டு) பதவி உயர்வு அளித்து வருகிறது.
அதுபோல் புதுவை காவல்துறையில் நேரடி தேர்வை ரத்து செய்து விட்டு சீனியாரிட்டி அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.