சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டருக்கு 2½ ஆண்டு ஜெயில்- புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
- சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 38). என்பவர் சிறுமியை தடுத்து நிறுத்தி சவுக்கு மரத்தில் கட்டி வைத்து பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமி கூச்சலிட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும் மரத்தில் கைகள் கட்டப்பட்டதால் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே தவித்துக்கொண்டிருந்தார். காலையில் அங்கு சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.