108 ஆம்புலன்சுகளுக்கு தர சான்றிதழ்-பா.ம.க. வலியுறுத்தல்
- எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.
- புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.
அவற்றில் ஒன்று இந்திய அளவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து என்.ஆர்.எச்.எம். மூலம் நடை முறைப்படுத்தினார். 108 ஆம்புலன்சை பராமரிப்பது அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி என்.ஆர்.எச்.எம். மூலம் மாநில அரசு கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது. இந்த விபரீத நிலை உணர்ந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே 2 மாதமாக 108 ஆம்புலன்ஸ் பராமரிப்பு இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளது.
மேலும் கரிக்கலாம்பாக்கம், காட்டேரிக்குப்பம் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இதே காரணத்துக்காக ஓரங்கட்டப்பட்டு உள்ளது. இதனை புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக அந்த வாகனங்களை
எப்.சி. (தரச்சான்று)எடுத்து பயன்படுத்த வேண்டும்.
எப்.சி. எடுப்பதற்கு நிதி இல்லை என்று சொன்னால் அந்த நிதி செலவை பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்க தயாராக உள்ளது.
108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கு உடனடியாக கொடுக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் எப்.சி. எடுத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.