மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
- 100 பேர் கைது
- அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை குறைந்தவிலையில் வழங்கவேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கையால் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி புதுவை அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினர். மாநில செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர்கள் சுதா சுந்தரராமன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் பில்லுக்கடை சந்திப்பில் ரெயில்வே பாதையை நோக்கி சென்றது. அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதனால் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் சிகப்பு கொடியுடன் தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.
மற்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனிடையே ஊர்வலத்திலிருந்து போலீசாரை மீறி ஓடி யவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் ரெயில் வந்தது. போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதன்பின் ரெயில் சென்றது. ஒட்டுமொத்தமாக 15 பெண்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.