புதுச்சேரி

புதுச்சேரியில் இடி-மின்னலுடன் மழை: மரங்கள் வேரோடு சாய்ந்தது

Published On 2024-07-06 05:10 GMT   |   Update On 2024-07-06 05:10 GMT
  • பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது.

புதுச்சேரி:

புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின் தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வருகிறது.

பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று காலையும் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தி ருந்தது.

இதற்கு ஏற்றார்போல நேற்று இரவு 8 மணிக்கு மேல் பயங்கர வெளிச்சத்துடன் மின்னலும், பெரும் சத்தத்துடன் இடியும் புதுவை மக்களை மிரட்டியது.

இதன்பின் மழையும் கொட்டத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நகர பகுதியில் பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோடியர் மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது.


இடி, மின்னல் காரணமாக புதுவை நகரம் மற்றும் ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மர கிளைகள் விழுந்தது.

இதேபோல நகரை ஒட்டியுள்ள புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது. சாய்ந்த மரங்களை புதுவை, கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.

வழக்கமாக இரவு நேரத்தில் புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். ஆனால் நேற்று கடுமையான இடி, மின்னல் இருந்ததால் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இன்று காலையில் 10 மணி வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. தற்காலிக பஸ்நிலையம் சேறும், சகதியுமாகியுள்ளது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News