ஆக்கிரமிப்புகள் அகற்றம்-போலீசார் குவிப்பு
- கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலை சுமார் 16 மீட்டர் அகலம் உடையது.
- இந்த ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே அங்கிருக்கும் மழைநீரை வெளியேற்ற முடியும்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலை சுமார் 16 மீட்டர் அகலம் உடையது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பும், கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் இளங்கோ நகர், கிருமாம்பாக்கம், மந்தவெளி பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லாமலும் இருந்துவந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே அங்கிருக்கும் மழைநீரை வெளியேற்ற முடியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெளியேற முடியாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக கொடுத்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறையினர், சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அப்புறப்படுத்தினர். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் கோதண்டம், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கரன், சரவணன் ஆகியோர் ஈடுபட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பலரது வீட்டின் சுவர்கள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக இருந்தது. அதையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.