கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீட்டு ஆழ்கடலில் விட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு-சான்றிதழ்
- பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் ரங்கசாமி கலந்து கொண்டார்.
- புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த 13-ந் தேதி காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள 15 டன் எடை உள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது உயிருடன் இருந்ததால் பட்டினச்சேரி மீனவர்கள் 13 பேரும், துறைமுக ஊழியர்கள் 7 பேரும் கப்பல் படை உதவியுடன் காலை 11 முதல் இரவு 7 வரை மீட்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் ஆழ்கடலில் சேர்த்தனர்.
உயிரை பணயம் வைத்து திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்ல உதவிய மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுவை பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இதனை வழங்கினார்.
மேலும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் தொடங்கப்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன் புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், தலைமை வனஉயிரினக் காப்பாளர் வஞ்சுளவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.