ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தல்
- பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது 133 பணிகள் ரூ. 930 கோடி நிதியில் நடைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
புதுச்சேரி பஸ் நிலையம், அண்ணா திடல், பெரிய மார்க்கெட், பழைய ஜெயில் போன்ற இடங்கள் இத்திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்று, நமது புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிப்பதாகும்.
இந்த மத்திய அரசின் திட்டம் நமது புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.
ஆனால், இதற்கு முன் மாநில அரசால் தொடரப்பட்ட பல பணிகளும், தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் பணி நடைபெற்று வரும் ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பிலான, அண்ணா திடல் பணிகளும் தாமதமானதை முன் உதாரணமாகக் காட்டி, மேற்கண்ட புதிய பணிகளும் தாமதமாகும் என வியூகத்தின் பேரில், வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் போராட்டம் உள்ளிட்டவை நடத்தி திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது வருந்தத்தக்கதாக உள்ளது.
இந்த திட்டங்கள் நிறைவு பெற்றால், நீண்ட காலத்திற்கு, தற்போதிருப்பதை விட சிறப்பாக வியாபாரம் செய்ய முடியும், வருங்கால சந்ததியினரும் பயனடைவார்கள் என்பதை வியாபாரிகள் சிந்திக்க வேண்டும்.
புதுவை நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதால் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாகவும் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, புதுச்சேரி மாநிலத்திற்கு நீண்ட காலத் தீர்வாக, பல்வேறு நன்மைகளை உருவாக்கும் நல்லதொரு மத்திய அரசின் திட்டம் நிறைவேற, வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.