சுல்தான்பேட்டை தெப்லான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
- அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவுறுத்தல்
- ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி சுல்தான்பேட்டையில் உள்ள ராஜா நகர் விரிவாக்கம் முதல் 3 ஸ்டார் நகர் உள்பட 17 நகர் வழியாக தெப்லான் வாய்க்கால் ஜி.என்.பாளையம் செல்கிறது.
தெப்லான் வாய்க்காலை தூர்வாரி மழை நீர் தேங்காமல் செல்வதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேடுதூக்கி சாலை அமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து தரவும் அந்த பகுதி பொதுமக்கள், ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்ய நாராயணன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் பொருட்டு தெப்லான் வாய்க்கால் மீது இருக்கும் ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், முஜிபாய், ஹாஜி, ரபீக், ராஜா முகமது, சிராஜி, சுல்தான், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுள்ளா, அயலக அணி துணை அமைப்பாளர் பக்ரூதீன், ஹாலித், கார்த்திகேயன், முரளி உடன் இருந்தனர்.