குடிபோதையில் பஸ் ஓட்டிய தமிழக அரசு பஸ் டிரைவர்: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
- ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
- தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.
ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.