புதுச்சேரி

அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு- புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2023-06-06 10:20 GMT   |   Update On 2023-06-06 10:20 GMT
  • உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
  • மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி வந்தார்.

தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2½ ஆண்டாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

இதை கண்டித்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சேர்மனான தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை கண்டித்தும் தலைமை செயலகத்தை நேற்று நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

ஆனால் தலைமை செயலாளர் அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு வந்தார்.

நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மேலும் அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கேட் ஏறி குதித்து சென்றனர்.

அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.

மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின்னர் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார்.

இந்த நிலையில் கம்பன் கலையரங்கிற்கு நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்தும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.வை தடுப்பதா? என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து, ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு புகாரை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ஓதியஞ்சாலை போலீஸ் நிலைய பணிகளை கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், அரசு விழாவில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News