திருட்டு பைக்குகளை கொண்டு 'தனிக்குழு' மூலம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தல்
- தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.
- புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு அனுமதியுடன் 130 சாராய கடைகளும், 50 கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு, அரசுக்கு சொந்தமான சாராய வடி சாலை மூலமாக சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சாராயம் விற்பனை கிடையாது. டாஸ்மாக் மதுபானங்கள் மட்டுமே விற்கப்படுகிறது. தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.
புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இன்னொரு பக்கம், வெளி மாநிலத்தில் புதுச்சேரிக்கு கள்ளத்தனமாக கொண்டு வரப்படும் ஆர்.எஸ்.எனப்படும் எரிசாராயம் தமிழக பகுதிகளுக்கு கேன் கேன்களாக கடத்தி செல்லப்படுகிறது.
எரிசாராயத்தில் சரியான அளவு தண்ணீர் கலந்தால், மிதமான போதை தரும் சாராயமாக மாற்றலாம். ஆனால், கடத்தி செல்லும் சாராய வியாபாரிகள் போதைக்காக அதில் சில ரசாயனங்களை கலப்பதால் விஷ சாராயமாக மாறி விடுகிறது.
தமிழக வியாபாரிகளுக்கு சாராயம் கடத்தி செல்வதற்காக தனிக் குழுக்கள் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
புதுவையில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை இணைக்க 81 சாலை வழிகள் உள்ளது. இந்த கிராமபுற சாலைகள் வழியாகவும், சந்து பொந்துகள் வழியாகவும் எளிதாக சாராயம் கடத்துகின்றனர்.
இந்த பாதைகள் அனைத்தும் கடலுார், விழுப்புரம் மாவட்ட மது விலக்கு போலீசாருக்கு நன்கு தெரியும்.இருந்தபோதும், இந்த வழிகளை விட்டுவிட்டு திண்டிவனம் புறவழிச்சாலையில் கிளியனுார், கடலுார் மஞ்சக்குப்பம், சோரியாங்குப்பம், கெகராம்பாளையம், திருக்கனுார் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்கின்றனர்.
இதில் பெரும்பாலும் யாரும் சிக்குவதில்லை. புதுச்சேரியில் திருடப்படும் 80 சதவீத பைக்குகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட சாராய கடத்தல் கும்பலுக்கு விற்கப்படுகிறது. திருட்டு பைக்குகளில் கிராமப்புற உட்புற சாலைகள் வழியாக சாராயம் ரெகுலராக கடத்தப்படுகிறது.
போலீசார் மடக்கினால் சாராயத்துடன், பைக்கையும் விட்டு விட்டு தப்பி விடுகின்றனர்.