புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு
- சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
- சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை சிறப்புக் குழு தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, பெற்றோரிடம் ஒப்படைக்க சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி மாநில டி.ஜி.பி. சீனிவாசன் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.