திருநள்ளாறில் சனி பெயர்ச்சி விழா: 15-ந்தேதி முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு
- சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
- பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு:
திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.