புதுச்சேரி

கோப்பு படம்

மதுபான கொள்கையில் பா.ஜனதா நிலைப்பாடு என்ன? வையாபுரி மணிகண்டன் கேள்வி

Published On 2022-12-12 08:15 GMT   |   Update On 2022-12-12 08:15 GMT
  • புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
  • ங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.

இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பா.ஜனதா நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பா.ஜனதா வின் தேசிய கொள்கை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News