அரசு திட்டங்களை தடுப்போர் மீது வழக்கு பதிவு செய்ய மறுப்பது ஏன்?
- நேரு எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதியில் உப்பனாறு மேம்பாலம், அண்ணா திடல் விளையாட்டு மைதானம், நேருவீதி பெரியமார்க்கெட், புதிய பஸ்நிலைய மேம்பாட்டு பணி ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஸ்தம்பித்து நிற்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ளவர்களை அழைத்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின் நேரு எம்.எல்.ஏ கூறியதாவது:-
இந்த திட்டங்கள் தனிப்பட்ட தொகுதி பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த புதுவை மக்களின் பிரச்சினை. எனவே பணிகள் தடைபட காரணமானவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிக்கு சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அதை மீறி சென்றதால் வழக்குப்பதிவு செய்தனர். இப்போது அரசு பணிகளை தடுக்கும் தனி நபர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்ய மறுக்கிறார்கள்? இவ்வாறு நேரு எம்.எல்.ஏ கூறினார்.