இந்தியா
null

படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்.. தேசிய கல்வி தினம் - ஒரு பார்வை

Published On 2024-11-11 07:56 GMT   |   Update On 2024-11-11 08:58 GMT
  • சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், மவுலான அபுல் கலாம் ஆசாத்.
  • தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து பலர் பலவிதாமாக பேசக் கேட்டிருப்போம். இந்தியா போன்ற இளைய சமுதாயம் அதிகம் உள்ள நாட்டில் கல்வியே அனைத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. அனைவரையும் முதலில் கல்வி சென்று சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டியதாக உள்ளது.

இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழ்நாட்டில் இதற்கான அதிரடி திட்டங்களை கொண்டுவந்தவர் கல்விக் கண் திறந்த காமராஜர். அடுத்ததாக எந்த மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். கல்விக் கொள்கை பிரச்சனைகள், அரசியல் தலையீடு என தற்போதைய சூழலில் இந்த இரண்டாவது கடமை அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது ஆகும்.

 

இந்நிலையில் இன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுவதால் அது குறித்து மீள் பார்வை நமக்கு தேவைப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், உரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றலை வளர்க்கும் வகையில் கதை, கட்டுரை, விவாதம், பேச்சு உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும்.

சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், மவுலான அபுல் கலாம் ஆசாத். 1947 ஆகஸ்ட் 15லிருந்து 1958 பிப்ரவரி 2 வரை அவர் இப்பதவியை வகித்தார். அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக அவர் பிறந்த தினமான நவம்பர் 11, ஆண்டுதோறும் தேசிய கல்வி தினம் (National Education Day) என இந்திய அரசால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, கல்வியாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தியாவின் பெருமைமிகு மகனான அபுல் கலாம் ஆசாத், கல்விக்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரது ஆற்றலை நினைவுகூரும் வகையிலும், அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் "தேசிய கல்வி நாள்" என கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது" என 2008 நவம்பர் 11 அன்று தேசிய மனிதவள துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

மொத்தத்தில் அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் வசனமான, நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிறுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிறுவானுக, ஆனா படிப்ப மட்டும், நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம், நீ அவனுகள எதுத்து ஜெயிக்கணும்-னு நினைச்சேனா படி நல்லா படிச்சு ஒரு அதிகாரத்துல போய் உக்காரு, ஆனா அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்பறம், அவனுக நம்மக்கு பண்ணுறத நீ எவனுக்கு பண்ணாம இரு என்ற அறிவுரையும் இந்த சூழலில் நினைவுகூரத்தக்கது. 

இதற்கிடையே தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நமது நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கான அவசியம் ஏற்படாத வகையில் நமது கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். நமது நடுத்தர குடும்பங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. வெளிநாட்டிலிருந்து மக்களை ஈர்க்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News