குறைந்த விலையில் மேக்புக் - ஆப்பிள் அசத்தல் திட்டம்?
- ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
- குறைந்த விலை மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் M2 சிப்செட் குறைபாடு காரணமாக இந்த ஆண்டு மேக்புக் மாடல்களின் வினியோகம் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்து M2 பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் மேக்புக் மாடல்கள் விற்பனை அதிகரிக்கலாம். ஒருவேளை இது பலனளிக்கவில்லை எனில், 2025 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ரிடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இதற்காகவே ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்தவிலை மேக்புக் மாடல்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆண்டிற்கு 8 முதல் 10 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. குறைந்த விலை மேக்புக் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.