ரியல் லைஃப் ரிமோட் கன்ட்ரோல் கார் - சோனியின் சிறப்பான சம்பவம்
- காரை மேடைக்கு கொண்டுவந்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
- மேடைக்கு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அஃபீலா எனும் பெயரில் உருவாகும் இந்த கார் உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ்-இல் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ். 2024) நிகழ்வில் சோனி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. சோனியின் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும் என்பதை விட, அந்நிறுவனம் காரை எப்படி மேடைக்கு கொண்டுவந்தது என்ற விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தற்போது வரை கான்செப்ட் வடிவில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலை சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் 5 டூயல் சென்ஸ் கண்ட்ரோலர் மூலம் மேடைக்கு கொண்டு வந்தது. கன்ட்ரோலர் மூலம் இயக்கப்பட்ட நிலையில், சோனியின் எலெக்ட்ரிக் கார் ரிமோட் முறையில் மேடைக்கு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
சோனியின் எலெக்ட்ரிக் காரில் உண்மையில் இதுபோன்ற வசதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது. மேலும் இதுபோன்ற வசதி பயனர்களுக்கு வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் சோனி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளாக தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி இந்த ஆண்டின் டெக் நிகழ்விலும் பங்கேற்ற அஃபீலா கார் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சோனி மற்றும் ஹோண்டா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த கார் அன்ரியல் என்ஜின் 5.3 பயன்படுத்துகிறது.
இன்டர்நெட் சார்ந்த மெட்டா டேட்டா கொண்டு பயனர்கள் 3டி மேப், விர்ச்சுவல் ஸ்பேஸ் மற்றும் ஆக்மென்டெட் ரியாலிட்டி வியூ போன்றவற்றை இயக்க முடியும். காரில் பயணிக்கும் போதும், கார் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பயணிகள் பொழுதுபோக்கிற்காக சோனியின் மீடியா கேட்டலாக் வழங்கப்படுகிறது.
அஃபீலாவில் உள்ள மல்டி கேமரா டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம்களை தயார்ப்படுத்தும் வகையில் செயற்கை சுற்றுச்சூழல்களை அன்ரியல் என்ஜின் உருவாக்குகிறது. குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட்-இன் அஸ்யூர் கம்ப்யூட்டிங், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியோடு இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன.