பிராஜக்ட் கியூ - சோனியின் புதிய கையடக்க சாதனம் அறிமுகம்
- புதிய கையடக்க சாதனம் “பிராஜக்ட் கியூ” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
- பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது.
சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பிளே ஸ்டேஷன் 5 கேம்களின் அக்சஸபிலிட்டியை மேம்படுத்த முடியும். பிளே ஸ்டேஷன் ஷோகேஸ் நிகழ்வில் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய கையடக்க சாதனம் "பிராஜக்ட் கியூ" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்த சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60fps-இல் கேம்களை வைபை மூலம் இயக்கும் திறன் கொண்ட எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ட்ரிகர்கள், ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பிளே ஸ்டேஷன் 5 கன்சோலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டுமே புதிய கியூ சாதனத்தில் விளையாட முடியும். தனித்துவம் மிக்க கேமிங் சாதனமாக இல்லாமல், இது பிளே ஸ்டேஷன் 5 உடன் வழங்கப்படும் சாதனமாக இருக்கும் என்றே தெரிகிறது. முதற்கட்டமாக இந்த சாதனம் கேம் ஸ்டிரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளை சப்போர்ட் செய்யாது.
எனினும், கிளவுட் கேமிங் சேவையை வழங்குவதில் சோனி பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். இதே வசதி பிராஜக்ட் கியூ சாதனத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது சோனி நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும். கையடக்க கேமிங் சாதனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து சோனி, பிராஜக்ட் கியூ திட்டத்தை துவங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.