அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் அறிமுகமான புது இன்ஸ்டா அம்சம் - எதற்கு தெரியுமா?

Published On 2022-10-19 07:25 GMT   |   Update On 2022-10-19 07:25 GMT
  • இன்ஸ்டாகிராம் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது அம்சம் தற்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது.
  • புது அம்சம் பற்றிய தகவல்கள் இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் தனது Age Verification எனும் வயதை உறுதிப்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தளத்தில் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இன்ஸ்டாகிராம் குறிக்கோளாக வைத்துள்ளது. அந்த வகையில் புது அம்சமும் இதை பரைசாற்றும் வகையிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் வயதை உறுதிப்படுத்தும் அம்சம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

தளத்தில் சில அம்சங்களை மேம்படுத்தும் வகையில், சோஷியல் வவுச்சிங் நீக்கப்படுகிறது. இதுவரை இன்ஸ்டாகிராம் பயனரின் வயதை அறிய மூன்று வழிமுறைகள் வழங்கப்பட்டு இருந்தது. அதில் ஒன்று புகைப்பட சான்றை பதிவேற்றம் செய்வது, நண்பர்களிடம் வயதை உறுதிப்படுத்த கேட்பது மற்றும் செல்பி வீடியோ பதிவு செய்வது உள்ளிட்டவை அடங்கும். தற்போது சோஷியல் வவுச்சிங் நீக்கப்பட்டதால், இரு ஆப்ஷன்களை கொண்டு தான் பயனர் வயதை உறுதிப்படுத்த முடியும்.

பயனரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமானது என்பதை உறுதிப்படுத்த புகைப்பட சான்று அல்லது செல்பி வீடியோ எடுக்க வேண்டும். இதற்காக மெட்டா நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த யோடி எனும் டிஜிட்டல் சான்று உறுதிப்படுத்தும் சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த கூட்டணி மூலம் பயனரின் சான்றுகளை வீடியோ செல்பி வாயிலாக உறுதிப்படுத்த முடியும்.

Tags:    

Similar News