என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
"களத்தில் வாள் எடுப்போம்: வெளியே தோள் கொடுப்போம்": இந்திய-பாக். வீரர்கள்
- இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு போட்டி பல வருடங்களாக நடைபெறவில்லை
- களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வது வழக்கம்
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
2012-ஆம் வருடத்திற்கு பிறகு ஐசிசி தொடரிலும், ஆசியா கோப்பை தொடரிலும் மட்டுமே இரு அணிகளும் சந்தித்து வருகின்றன. இருதரப்பு போட்டி நீண்டகாலமாக நடைபெறவில்லை.
விளையாட்டு போட்டியாக இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் நடப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ரசிகர்கள் ஏற்படுத்துவதும், அதே போல் களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வதும் வழக்கம்.
ஆனால், சமீப காலங்களில் மைதானத்திற்கு வெளியே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஆரோக்கியமான நட்பு நிலவி வருகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் குழந்தைக்கு அன்பு பரிசளித்தார்.
கடந்த 2022ல் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடரின் போது இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃபின் குழந்தையை கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.
ஆகஸ்ட் 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினயின் போது ஏற்பட்ட கலவரத்தில், பாகிஸ்தான் வீரர் ஃபசல் மெஹ்மூத்தை கலவரக்காரர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு காப்பாற்றியது சரித்திரத்தில் பதிவான நிகழ்வாகும்.
1987ல் இருதரப்பு தொடர் இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்களின் போது நடைபெற்றது. இரு தரப்பு வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதும் இதனால் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் நீச்சல் குளமே நிறம் மாறியதாக அப்போதைய விக்கெட் கீப்பர் கிரண் மோரே தெரிவித்திருந்தார்.
90களில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் பரஸ்பர நட்பை வெளியே காட்டி கொள்ளாமல் இருப்பது வழக்கம். இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களின் தனிப்பட்ட அழைப்பிற்காக இந்தியா வரும் போது இரு நாட்டு வீரர்களும் நட்சத்திர ஓட்டல்களில் சந்திப்புகளை முடித்து கொள்வார்கள். பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் தனக்கு ரசிகர்கள் அதிகம் என கூறியதற்காக ஷஹித் அஃப்ரிதி ஒரு முறை அந்நாட்டில் நீதிமன்றத்திற்கு செல்ல நேர்ந்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கும் போது, அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து தனது சமகால நண்பர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2021ல் இந்தியாவின் பழம்பெரும் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி ஒரு சீக்கிய வழிபாட்டிற்காக பாகிஸ்தான் சென்ற போது அவருடைய சமகால பாகிஸ்தான் வீரர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாமை, "உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர்" என புகழ்ந்திருந்தார். கோலி கடந்த செப்டம்பர் மாதம், இலங்கை கண்டியில் உள்ள பல்லேகெலெ மைதானத்தில் பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் உடன் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்ததும் வைரலானது.
நேற்றைய இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கு எதிராக கூச்சலிட்ட போது அவ்வாறு செய்ய வேண்டாம் என விராட் கோலி அவர்களை கேட்டு கொண்டார். இவ்வருட ஐபிஎல் தொடரின் போது இவர்களிருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டியை போட்டியாக மட்டுமே பார்க்கும் மனநிலை, ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் வளர்ந்து வருவதை ஆரோக்கியமான மாற்றமாக கருதுவதாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்