என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
- 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
- ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் மொத்தம் உள்ள 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் மண்டபம், மடப்பள்ளி புஷ்கரணி வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளது.
வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அந்த குளத்தை பார்த்து மகிழ்ந்து பின்னர் அருகில் உள்ள துவார பாலகேஷி அம்மனை வழிபடலாம்.
இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன.
கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம்.
இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர்.
ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது
கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.
கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது.
முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.
பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
- இது குழந்தை வரம் அருளும் பிரார்த்தனை தலமாகும்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தொன்மையான வழக்கு. ஆனால், நதிக்கரையிலும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. வேலூர் அருகே வேகவதி என்றழைக்கப்படும் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்தான் அது. இக்கோயில் 500 ஆண்டு பழமையானது. திருத்தணியில் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் முருகனின் அதே தோற்றத்தை ரத்தினகிரியிலும், காங்கேயநல்லூரிலும் காணலாம். மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அடுத்து அழகிய கொடி மரம். அதையடுத்து அர்த்த மண்டபம். கருவறையில் மூலவர் வள்ளிதெய்வானையுடன் அருளாட்சி செய்ய, சுற்றுப் பிரகாரங்களில் விநாயகர், சிவன், அருணகிரிநாதர், தண்டபாணி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கொலு வீற்றிருக்கின்றனர்.
1929ம் ஆண்டு கற்காரத்தின் மீது ராஜகோபுரத்தை நிர்மாணிக்கும் திருப்பணியை மேற்கொள்ள, திருமுருக கிருபானந்தவாரியாரின் தந்தை மல்லையதாஸ் பாகவதர் முன்வந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23ம்நாள் மாலை 4 மணியளவில் ராஜகோபுரத்தின் 5வது நிலையில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மல்லையதாஸ் பாகவதரின் மற்றொரு மகனான சிறுவன் ஸ்ரீசைலவாசன் உணவு எடுத்து சென்றான்.
பின்னர் அங்கிருந்து இறங்க முயற்சித்தபோது தவறி 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். மூர்ச்சையின்றி கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லையதாஸ், கோயிலின் கருவறை நோக்கி 'முருகா' என்று மனமுருகி வேண்டியபடி ஓடினார். பின்னர் மகன் அருகில் சென்று தனது குருநாதர் உபதேசித்த சடக்கர மந்திரத்தை ஓதினார். அங்கு கூடிய பொதுமக்களும் மூர்ச்சையின்றி கிடந்த ஸ்ரீசைலவாசனின் நெற்றியில் விபூதியை பூசி சிறுவனை காக்கும்படி முருகனை நெஞ்சுருக வேண்டினர். சிறிது நேரத்தில் குழந்தை எந்தச் சிறு கீறலுமின்றி பெற்றோரை பார்த்து சிரித்தபடி எழுந்தான். முருகப்பெருமானின் இந்த மகிமையை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த சிறுவன் திருமுருக கிருபானந்தவாரியாரின் சகோதரர் ஆவார்.
இக்கோயிலின் எதிரிலேயே முருகனின் புகழை திக்கெட்டும் பரப்பிய திருமுருக கிருபானந்தவாரியாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு 'ஞானத்திருவளாகமாக காட்சியளிக்கிறது. பிரார்த்தனை தலமான இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி ஆண்டுதோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை மற்றும் தை கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்தபிறகு மீண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் வேலூர்காட்பாடி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.
- இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது
- இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது.
இறைவன் - அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி
இறைவி - அருள்தரும் குறுங்குடிவல்லி
தீர்த்தம் -திருப்பாற்கடல்
விமானம் - பஞ்சகேதக விமானம்
புராணச் சிறப்பு
வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.
'நம்பாடுவான்' என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோவிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.
நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.
இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு " தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்" என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தனிச்சிறப்பு
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..
திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).
ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்
ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு 'மகேந்திரகிரி நாதர்' என்றும் ' பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர்..
"வெள்ளிறா" என்னும் சாதிமீனை தாய்கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).
மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.
அமைவிடம் :
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
- சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம்.
- பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.
கோடி அற்புதங்கள் விளையும் பூமி
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சியளிக்கின்றது.
ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கி கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன(லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியாரின் வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருந்தது.
மேலும், ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் நற்செய்தி பணியாற்றும் ஆர்வமும், அவரை சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்(மாற்கு 16:15) என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.
சவேரியாரின் இந்திய வருகை
இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.
போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜாண் உதவியோடு சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலே இறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.
கோட்டாரில் இறைப்பணி
அதைதொடர்ந்து குமரிமாவட்டம் கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.
மேலும், நம்பிக்கையோடு முன் வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு, இங்குதான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறைமாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்குதான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார்.
-பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன்
- மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது.
- ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சில சிவன் கோவில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோவில்களைப் பற்றி இங்கே காண்போம்.
திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோவில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோவிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இது.
திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
மயிலாடுதுறையின் மிகபெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.
திருவானைக்காவல் கோவிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோவில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோவில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கி உள்ளார்.
தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.
திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோவில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோவில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார்.
சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோவில் வீற்றுள்ளது. இந்த கோவில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோவிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோவில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோவில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.
சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.
ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர்.
- இந்தக் கோவிலை ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
- இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.
இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுவந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை 1½ அடி உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.
இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.
3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.
அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.
தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
பஞ்சபூத தலம்
பவுர்ணமி அம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவீரமாகாளியம்மன் கோவில் பஞ்சபூத தலத்தை உள்ளடக்கியது. இந்தக் கோவிலின் முன்புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் கோவிலுக்கும், விநாயகர் சன்னிதிக்கும் இடையில் குளம் (நீர்) உள்ளது. கோவில் இயற்கை சூழ வயல்வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதில் 'புற்று' நிலம் என்றும், அம்மன் 'நெருப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோவில் பகுதியில் (காற்று) எப்போதும் சிலு, சிலுவென்று காற்று வீசிக்கொண்டே இருக்கும். கோவில் திறந்த வெளியில் (ஆகாயம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்றுடன் கூடிய பசு சிலை
பாபவிமோசனம், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வகையில் கன்றுடன் கூடிய பசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்துள்ள பீடம் 3 அடி உயரமும், சிலை அமைப்பு 3½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகே புற்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த புற்றுக்கு தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. விநாயகருக்கு தல விருட்சமாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ளது. இந்த இரண்டு மரங்களுக்கும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டுள்ளது. வீரமாகாளியம்மனுக்கு தலவிருட்சமாக புளியமரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-வெண்ணிலா, பள்ளியூர்.
- இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
- அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.
மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.
கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.
அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.
ஆஞ்சநேயருக்கு கோவில்
கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.
அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
திருவிழாக்கள்
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.
அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.
பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.
- இந்த கோவில் கேதுவின் அம்சமாக விளங்குகிறது.
- நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.
நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது.
தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் செய்து தேவர்பிரானாக மகா விஷ்ணுவின் காட்சி பெற்ற முந்தைய வரலாறு நாம் அறிந்ததே. அந்த தேவர்பிரானை அம் முனிவர் தினமும் யாரும் முகர்ந்து பார்க்காத அழகிய பெரிய செம்மை நிறம் கொண்ட தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வருகிறார்.
இதற்காக இக்கோவிலின் வடக்கு புறம் உள்ள ஓரு பொய்கையில் தினமும் சென்று அந்த செந்தாமரை மலர்களை பறித்து வருகிறார். இந்த வழிபாட்டினால் பேரானந்தம் அடைந்த மகா விஷ்ணு ஒரு நாள் அந்த செந்தாமரை மலர்களை பறிக்க சென்ற முனிவரை பின் தொடர்ந்து செல்கிறார். அவர் பொய்கையில் செந்தாமரை மலர்களை பறித்து திரும்பும் போது தனக்கு பின் ஒருவர் நிற்பதை கண்டு அதிசயித்த முனிவருக்கு பெருமாள் தன் சுய உருவில் காட்சியளித்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த முனிவர் தனக்கு காட்சியளித்த கோலத்திலேயே அங்கு நித்ய வாசம் புரிய வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த பெருமாளும் நான் செந்தாமரை மலர்களை விரும்பி இங்கு வந்ததால் அரவிந்தலோசனன் என்னும் திருநாமத்தில் அங்கேயே நிரந்தரமாக காட்சியளிப்பதாக கூறி முனிவருக்கு அருள்புரிந்தார்.
அசுவினி குமாரர்களுக்கு அருள் செய்த வரலாறு:
முற்காலத்தில் அசுவினி குமாரர்கள் என்னும் இரண்டு தேவ சகோதரர்கள் வைத்திய சாத்திரங்களுக்கு அதிபதியாக விளங்கி வந்தார்கள். அவர்கள் பூ உலகில் நடைபெறும் யாகங்களில் இருந்து அவர்களின் பங்கிற்குரிய அவிர்ப்பாகம் பெற்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களுக்கு வர வேண்டிய அவிர்ப்பாகம் தடைபட்டது. அதற்குரிய காரணத்தை பிரம்மனிடம் கேட்க, பிரம்மதேவனோ பூ உலகில் வைத்திய சாத்திரம் கற்ற வைத்தியர்கள் செய்த பாவத்தினால் உங்களுக்கு வர வேண்டிய அவிர் பாகம் தடைபட்டுள்ளது, அதனை சரி செய்ய நீங்கள் பூ உலகம் சென்று தாமிரபரணி நதிக்கரையில் உறையும் அரவிந்த லோசனனை நினைத்து தவமியற்றினால் பயன் பெறலாம் எனக் கூறினார்.
அதன்படி அந்த அசுவினி குமாரர்கள் இருவரும் பூ உலகம் வந்து இத்தல அரவிந்தலோசனரை வழிபட்டு வந்ததன் பலனாக, பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து வேண்டும் வரம் தருவதாய் வாக்களிக்க, அசுவினி குமாரர்களோ யாகங்களில் இருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் முறைப்படி கிடைக்க வேண்டும் என வேண்டிட, பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். அந்த அசுவினி குமாரர்கள் இங்கு நீராடிய தீர்த்தமே அசுவினி தீர்த்தம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
விபிதனின் குஷ்ட நோய் தீர்த்த வரலாறு:
முற்காலத்தில் அங்கமங்கலம் என்னும் ஊரில் சத்தியசீலன் என்னும் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரிய விஷ்ணு பக்தர் ஆவார். அவருக்கு வன்னிசாரன், விபிதகன், சொர்ணகேது என மூன்று மகன்கள் இருந்தனர். இதில் விபிதகன் என்பவன் முற்பிறவி வினைப் பயனால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட, அது கண்டு வருந்திய சத்தியசீலரிடம், நாரதர் மகிரிஷி வந்து உன் மகன் முற்பிறவியில் தன் குருவுக்கு நிந்தனை செய்த காரணத்தினால் தான் இப்பிறவியில் குஷ்ட நோய் பீடித்துள்ளது என்றும் அதனை போக்க தாமிரபரணி கரையில் உள்ள அசுவினி தீர்த்தத்தில் நீராடி, அரவிந்தலோசனருக்கு செந்தாமரை மலர்களால் அர்சித்து வழிபட்டு வர நோய் நீங்கும் என கூறுகிறார்.
அதன்படி விபிதகனும் இங்கு வந்து அசுவினி தீர்த்தத்தில் நீராடி, செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்சித்து வழிபட அவனை பீடித்திருந்த குஷ்ட நோய் நீங்கியதாகவும் கூறப்படுகிறது.
மூலவர் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள்:
கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில், தன் இரு தேவியர்களோடு காட்சியளிக்கிறார் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயம் வரதம் காட்டியும், அருள்பாலிக்கிறார். இங்குள்ள உபய நாச்சியாரான தாயார் கருத்தடங்கண்ணி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். அதாவது கரிய நிறமுடைய கண்களை கொண்டவள் என்பது அந்த திருநாமத்தின் பொருள் ஆகும்.
உற்சவர் செந்தாமரைக்கண்ணன் சிறப்பு:
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு செந்தாமரை கண்ணனாக ஸ்ரீ தேவி, பூதேவி உடன் அருள்பாலிக்கிறார். இவர் செம்மை நிறமுடைய தாமரை மலர்களை ஏற்று அருள்புரிவதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை 1008 செந்தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு எழுந்தருளி உள்ள துலைவில்லி தாயார் இத்தலத்தின் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்று விளங்குகிறாள்.
நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
- இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
- இந்த கோவில் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.
திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலும் ஒன்று. திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோவிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
கோவில் வரலாறும் திருவிழாவும்:
நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோவிலுக்கு "குட்டி குடி திருவிழா" என்று நடத்தப் படுகிறது.
கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து)
ஆபத்தான ஆறுகள்:
இந்த கோவில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோவிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோவிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.
கோவில் அமைந்துள்ள இடம்:
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது.
- இந்த கோவில் ராகுவின் அம்சமாக விளங்குகிறது.
நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலை வில்லிமங்கலம்" தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.
மூலவர் பெயர்: சீனிவாச பெருமாள்.
உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள்.
தாயார்: அலர்மேல் மங்கை தாயார், பத்மாவதி தாயார்.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி.
கோவில் விருட்சம்: விளா மரம்.
கோவில் வரலாறு:
முற்காலத்தில் சுப்பரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். அவருக்கு ஒரு முறை பெரும் யாகம் செய்ய ஆசை ஏற்பட்டது. அந்த யாகத்தை நடத்துவதற்கு தகுந்த இடம் தேடி அலைகிறார் முனிவர். அந்த வேளையில் தான் தாமிரபரணியின் கரையில் தென்றல் தவழ்ந்து, அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிய சோலையாக திகழ்ந்த ஒரு இடத்தை கண்டு அதனை யாகம் செய்ய ஏற்ற இடமாக தேர்வு செய்கிறார் சுப்பரர். அவர் மனது மகிழ்ச்சியடையும் படியே அனைத்து சிறப்புக்களையும் கொண்டு திகழ்ந்த அந்த இடத்தில் முதலில் தான் தங்குவதற்கு ஒரு குடில் அமைத்தார்.
பின்னர் வேள்விச்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கொத்தி சீர் செய்தார். அப்போது ஓர் இடத்தில் மண்ணை கொத்திய போது, அங்கு ஓர் தராசும், வில்லும் கிடைக்கிறது. அதனை தன் கைகளால் முனிவர் வெளியே எடுக்க, அப்போது அந்த தராசு ஓர் அழகிய ஆண் மகனாகவும், வில் ஓர் அழகிய பெண் மகளாகவும் மாறிட, முனிவரோ அதிசயித்து நின்றார். அப்போது அந்த ஆணும், பெண்ணும் தம்பதியாக முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி நிற்கின்றனர். அவர்களை ஆசிர்வதித்த முனிவர், அவர்களிடம் தாங்கள் யார்? எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஆண் மகனாக இருந்தவர் தான் ஒரு தேவகுமாரன் என்றும் தன் பெயர் வித்யாதரன், இந்த பெண் என் மனைவி, நாங்கள் இருவரும் தேவலோகத்தில் மகிழ்ச்சியாக இருந்த போது அங்கு வந்த குபேரனை மதிக்காமல் அவமரியாதை செய்த காரணத்தால், அவரால் சபிக்கப்பட்டு இந்த பூ உலகில் தராசாகவும், வில்லாகவும் மாறி வீழ்ந்தோம் என்றும், பின் தங்கள் தவற்றை உணர்ந்து குபேரனிடம் மன்றாடியதன் பலனாக, அவர் மனம் இறங்கி நீங்கள் இருக்கும் பூ உலகில் ஒரு தவ முனிவர் வருவார், அவர் கைகளால் நீங்கள் தீண்டப்படும் போது சாப விமோசனம் பெற்று சுய உருவை பெறுவீர்கள் என அருளினார் என்றும் அதன்படி தாங்கள் எங்களை தொட்டு தீண்டியதால் விமோசனம் பெற்றோம் எனக்கூறி முடித்தார்.
இதனைக் கேட்ட முனிவர் அகம் மகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, அந்த இடத்தில் முறைப்படி வேள்விச் சாலை அமைத்து, பல்வேறு யாகங்களை மேற்கொண்டார். யாகத்தில் இருந்து தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் முறைப்படி அவர்களுக்கு பகிர்ந்து அளித்த அந்த முனிவரின் யாகத்தின் பலனாக இறுதியில் மகாவிஷ்ணு சீனிவாசனாக காட்சி அளித்து அந்த முனிவருக்கு அருளை வாரி வழங்கினார்.அந்த யாகத்தில் தேவர்களின் சார்பாக இருந்து அவிர்பாகங்களை ஏற்று பகிர்ந்து அளித்ததால் இத்தல பெருமாள் தேவர்பிரான் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.
மூலவர் சீனிவாச பெருமாள்:
கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் சீனிவாச பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார்.இங்கு தாயார்களுக்கென தனி சன்னதி இல்லை. அலர்மேல் மங்கை தாயார் மற்றும் பத்மாவதி தாயார் தனி உற்சவத் திருமேனிகளாகவே இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.
உற்சவர் தேவர்பிரான் சிறப்பு:
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு தேவர்பிரானாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான தேவர்பிரான் கோவில் அமையப்பெற்றுள்ளது. இது இரட்டை திருப்பதி என வழங்கப்படும் இரண்டு கோவில்களுள் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோவிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்ச வராகிய தேவர்பிரான் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் நின்ற கோலத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி கிடையாது. வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.
கோவில் சிறப்புக்கள்:
இங்கு பத்மாவதி தாயார் தன் மார்பில் மகா விஷ்ணுவை தாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த கோவிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது தீராத பல நோய்களையும் தீர்த்து வைப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
இரட்டைத் திருப்பதி என வழங்கிவரும் இங்கு ஒரே இடத்தில் அருகருகே இரண்டு தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளது. அதில் இக்கோவில் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.
துலை எனப்படும் தராசும், வில்லும் இங்கு சாப விமோசனம் பெற்றதால் துலைவில்லிமங்கலம் என்ற பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக் கோவிலின் புராணப் பெயர் திருத்தொலைவில்லிமங்கலம் ஆகும்.
முக்கிய திருவிழாக்கள்:
கார்த்திகை மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல தேவர்பிரான் பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார். இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று, அங்கிருந்து தனியார் வாகனங்களில் இக்கோவிலை சென்றடையலாம்.
- சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
- இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
கோ" என்றால் பசு, அதே போல் "சே" என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும்
"மாட்டூர் அரவா" என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம்.
சோழர்களின் புகழ்பெற்ற அரசன் "கரிகாலன்" தான் இழந்த சோழநாட்டை சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை(கோனாட்டை) கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை எக்காலத்திலும் வென்றவன். இராவணனோ எமனை வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி. மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான்.
அவனை இருவரும் துரத்தி சென்ற போது வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து "தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்" என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.
வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான், ஆனால் அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம் சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர் நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும் அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம் அனைத்தும் நீங்கும் என்று அருளினார்.
அது போல வலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும் என்றும் உபதேசம் செய்தனர். அவ்வாறு வாலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவரை கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். அதுமட்டுமில்லாமல் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம் திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறியலாம்.
- மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம்.
- ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.
ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக, தானாகத் தோன்றுபவை. இவை மனிதனால் உருவாக்கப்படாத அதிசயங்கள். ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. பூஜிப்பவர்களுக்கு ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்மஞான தத்துவத்தை சூட்சுமமாக உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள் இவை.
பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கம் உருவாகியது. அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் அமைந்திருக்கும் சென்னப்பமலைத் திருத்தலத்தில் 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் அருளால் 'ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்' ஜோதிர்லிங்கம் பூமியிலிருந்து தானாக தோன்றியது. பல யுகங்களாகத் தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் இது 13-வது ஜோதிர்லிங்கமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம்.
தோற்றத்தில் நமக்குப் பழக்கப்பட்ட லிங்கத்தைப் போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோற்றம் கொள்பவை. ஏற்கனவே உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தால் இந்த உண்மை தெரியும். ஜோதி வடிவில் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உலகம் தோன்றிய நாள் முதல் கொண்டு இந்தியாவில் ஏற்கனவே பன்னிரெண்டு திருத்தலங்களில் ஜோதிர்லிங்கங்கள் தோன்றியுள்ளன.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும், வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வெளிவந்த அமிர்தத்தை, அசுரர்கள் பறித்துச்சென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தந்த ஸ்தல புராணங்கள் ஜோதிர்லிங்கங்களின் பெருமைகளை பறைசாற்றினாலும், அவற்றில் பல ரகசியங்களும் மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக உள்ளது.
இத்தகைய அதிசய ஜோதிர்லிங்கம்தான் இந்த பூவுலகின் 13-வது ஜோதிர்லிங்கமாக சென்னப்பமலையில் 2002-ம் ஆண்டு உருவாகியது. இயற்கையாக, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட புண்ணிய திதியில், சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, சூட்சும ரூபத்தில் முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க, பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, விண்ணும் மண்ணும் ஜோதியாக இணைந்து, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, பூமியிலிருந்து மேலெழுந்து ஜோதிர்லிங்கமாக வெளிவந்தது. இதை 'லிங்கோத்பவம்' என்கிறோம்.
ஸ்ரீ பொன்முடி சூர்யநந்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இந்த ஜோதிர்லிங்கம், ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ஆத்ம லிங்கம் இது. முடிவேயில்லாத ஆனந்தத்தையும், எல்லையில்லாத அமைதியையும், பிறவிப் பயன்தரும் பிரம்மஞானத்தையும் அள்ளித்தரும் கோடிலிங்கம். ஜென்ம ஸாபல்யம் தரும் அமிர்தலிங்கம். இந்த தெய்வீக அனுபவத்தை அனைவரும் இங்கே உணரலாம்.
தல வரலாறு
பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி (அம்பிகை) முன்னொரு காலத்தில், 'தென் கைலாயம்' என்று போற்றப்படும் பனங்காட்டு பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலை திருத்தலத்தில் தவமிருந்தாள். சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கும், இந்த பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலை திருத்தலத்தில் அருள்பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.
அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மகா சிவராத்திரி அன்று 'தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து உயிரினங்களும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்' என்று பரமன் வரம் அருளினார் என்று தலபுராணம் கூறுகிறது.
அதன்படி 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இத்தல ஜோதிர்லிங்கமாக தோன்றி, அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் தலமாக மாறியது. அனைத்து உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்து சாப விமோசனம் அளிப்பது இந்த தலத்துக்கு மேலும் சிறப்பு.
ஒவ்வொரு ஜோதிர்லிங்க திருவாலயமும் அதன் தலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பு வழிபாட்டு முறைகள், நியதிகள் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கே உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், கற்றவன்-கல்லாதவன், ஆண்-பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று 'நாளும், பொழுதும்' வளமும் பெற இறைவன் வரம் தரும் திருத்தலம் இது. மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.
ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, வித்யா (கல்வி, தொழில்) பாக்கியம், மாங்கல்ய (திருமணம்) பாக்கியம், சந்தான (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.
-வெ.நாராயணமூர்த்தி, வேலூர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்