என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
- மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது.
- சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.
இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
இரண்டு நந்தி :
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
- இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.
பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.
குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.
1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.
குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.
- கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். அர்ச்சுனன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயம் 'விஜயநாதேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், 'சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்' என்று கூறினார்.
இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை நினைத்து தவம் இருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக, முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த பன்றியை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான். அதே நேரம் இன்னொரு அம்பும் அந்த பன்றியை துளைத்திருந்தது. அர்ச்சுனனை நோக்கி வந்த வேடன் ஒருவன், தான்தான் அந்த பன்றியை வீழ்த்தியதாக கூறினான். அதில் வேடனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபம் அதிகமாக தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு அந்த வேடனை, அர்ச்சுனன் தாக்கினான். அப்போது வேடனாக வந்த சிவபெருமான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.
அப்போது ஈசனின் அருகில் நின்ற அம்பாள், "ஐயனே.. ஆயுதங்களில் உயர்ந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவனா?" என்று கேள்வி எழுப்பினாள். அதற்கு சிவன், "அர்ச்சுனன் 'மஸ்ய ரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்" என பதிலளித்தார். அப்போது அர்ச்சுனனும், அம்பாளின் முன்பாக பணிவாக குனிந்து நின்று தன்னுடைய கையில் ஓடும் அந்த அதிர்ஷ்ட ரேகையை காண்பித்தான். பின்னர் சிவபெருமானையும், அம்பாளையும் அங்கேயே எழுந்தருளும்படி பணித்தான். ஈசனும் ஒப்புக்கொண்டார். அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்த ஈசன், 'விஜயநாதேஸ்வரர்' என்றும், இந்த திருத்தலம் 'திருவிஜயமங்கை' என்றும் பெயர் பெற்றது.
சோழர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு கோபுரம் சிறியதாகவும் அமைந்துள்ளது. இத்தல அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சி தரு கிறாள். முன் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரையும், பின் இரண்டு கரங்களில் அட்சரமாலை, நீலோத்பவ மலர் தாங்கியிருக்கிறாள். கோவிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நால்வர் திருமேனிகள் உள்ளன. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது. ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் வழிபாடு செய்யலாம். இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் பயணித்தால் திருவிஜயமங்கை திருத்தலத்தில் கொள்ளிட ஆற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்புறம்பியத்தில் இருந்து 8 கிேலாமீட்டர் தூரத்திலும் ஆலயத்தை அடையலாம்.
- இங்கு வில்வம் தல விருட்சமாகும்.
- சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
மூலவர் - சேவுகப் பெருமாள்
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்" என்றதுடன், "பெருமாளே" என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,"சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.
சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.
தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.
அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.
முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.
இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.
இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.
திருவிழா:
வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.
கோரிக்கைகள்:
கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோவில்,
சிங்கம்புணரி,
திருப்புத்தூர் தாலுகா,
சிவகங்கை மாவட்டம்.
- அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
- அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.
புற்று வடிவில் அம்மன்
இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.
சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.
கேரள பக்தர்கள்
இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.
மாசி கொடை விழா
இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.
முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.
இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களின் சபரிமலை
சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.
கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.
- இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
- 1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிகுந்த மறைமாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டார் மறைமாவட்டமும் ஒன்றாகும். கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்டவரம் தருபவர் என்று கிறிஸ்தவர்களால் போற்றி புகழப்படும் புனித சவேரியார் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு தொண்டாற்றிய பங்குகளில் கோட்டார் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வகிக்கிறது. இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு
இந்த கோட்டார் மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றாக நாகர்கோவில் மாநகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேலப்பெருவிளை பங்கு உள்ளது. இந்த பங்கு, கோட்டார் மறைமாவட்டம் உருவாவதற்கு, (அதாவது 1930-க்கு) முன்பே இருந்த பழமையும், பாரம்பரியமும் கொண்ட பங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானமாக இருந்தபோது கோவா மறைமாவட்டத்தில் இருந்து கி.பி.1886-ம் ஆண்டில் கொல்லம் மறை மாவட்டம் உருவானது. அப்போது இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த 14 பங்குகளில் மேலப்பெருவிைள பங்கும் ஒன்று என்ற பெருமையைக் கொண்டது. இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, மறைசாட்சியாக இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய முதல் இல்லற புனிதர் என்ற பெருமையைப் பெற்ற புனித தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு இந்த மேலப்பெருவிளை பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் அரை சென்ட் மனையில் சிலுவை பாணியில் பனை ஓலையினால் ஒரு குருசடியை இப்பகுதி மக்கள் உருவாக்கி இயேசுவை வழிபட்டு வந்தனர். 5 முன்னோடி குடும்பங்கள் இணைந்து இந்த குருசடியில் வழிபாடுகள் நடத்தி வந்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை உணர்ந்த இப்பகுதியின் முன்னோர்கள் குருசடி இருந்த இடத்தில் கி.பி.1832-ம் ஆண்டில் புனித செபமாலை அன்னைக்கு மண்சுவராலும், ஓட்டுப்புரையாலும் ஆலயம் ஒன்றை உருவாக்க நினைத்தனர். அதற்கு வடசேரி, அறுகுவிளை, புதுக்குடியிருப்பு, சாந்தான் செட்டிவிளை ஊர்க்காரர்களும், மேலப்பெருவிளை ஊர்க்காரர்களும் இணைந்து ஆலயம் எழுப்பினர்
வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை
1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது. 1942-ம் ஆண்டு தொடங்கி 1944-ம் ஆண்டுகளில் கோவில் உட்புறப் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் இந்த ஆலயம் கல் கட்டிடமாகவும், ஓடுகளால் ஆன மேற்கூைரயுடனும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கி.பி.1858-ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்தனர். இந்தியாவின் தென்கோடியான குமரி மண்ணையும் இந்நோயின் தாக்கம் விட்டு வைக்கவில்லை. அந்த சமயத்தில் மேலப்பெருவிளை மக்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சலேத் அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டினர். புனித லூக்காவின் நற்செய்தி வாசகத்திற்கேற்ப மாதா, மக்களுக்கு அருள்பாலித்து, ஒரு கெபியை கட்ட பணித்தார். அதன்படி மக்கள் கற்களை தலைமேல் சுமந்து வந்து கெபியைக் கட்டினர்.
அதில் 1867-ம் ஆண்டு புனித சலேத் அன்னை சொரூபத்தை அன்றைய கொல்லம் ஆயர் எப்ரேம் ஸ்தாபித்தார். ஊர் மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோய்களும் அன்னையின் அருளால் முற்றிலும் அகன்றது. அன்று முதல் இன்று வரை அன்னையிடம் மனம் உருகி வேண்டுபவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
புதுமைகள் நிகழ்கிறது
சலேத் மாதாவின் எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இந்த கெபியானது 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 -ந் தேதி அன்றிருந்த பங்கு பணியாளர்களின் இடையறாத உழைப்பாலும் பங்கு மக்களின் வீடுகள் தோறும் சென்று நன்கொடைகள் பிரித்தும் புதிதாகக் கட்டப்பட்டது. அன்றைய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கெபியை அர்ச்சித்து வைத்தார். சலேத் அன்னை 1864-ம் ஆண்டு சலேத் மலையில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ந் தேதி ஆடம்பர விழாவாக தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அத்தோடு புதுமைகள் பல நிகழும் அன்னையின் கெபியில், மாதந்தோறும் 19-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கஞ்சிதர்மமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் ஊர் மக்களுடன் இணைந்து, நன்கொடை சேகரித்து கெபியில் மேற்கூரை அமைத்து தந்துள்ளார்.
மேலப்பெருவிளை 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் தனிப்பங்காக உதயமானது. 1990-ம் ஆண்டு இந்த பங்கு பணியாளருக்கு இல்லம் அமைக்கப்பட்டது. அதுமுதல் பங்குத்தந்தை அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். 1962-ம் ஆண்டு இந்த ஊரில் ஒரு ரேடியோ நிலையம் கட்டப்பட்டது. அதனை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமன் திறந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 1966-ல் படிப்பகமும், 1968-ல் கோட்டார் சமூகசேவை மையத்தால் ஏற்படுத்தப்பட்ட கிராம மருந்தகமும் உருவானது. 1965-ம் ஆண்டில் ஊர் மக்களின் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய கோவில் நிலத்தில் கிணறு வெட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 2003-ம் ஆண்டு புனித ஜெபமாலை அன்னை சமுதாய நலக்கூடம் பங்கு மக்களின் உதவியோடு அடிக்கல் நாட்டப்பட்டு 2004-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
புனித தேவசகாயம்
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இந்த பங்கில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற குருசு கார்மல், புனித சலேத் அன்னை கெபியில் புதுமை பொருட்கள் விற்பனை நிலையத்தையும், நிர்வாகிகள் அலுவலகத்தையும் கட்ட முயற்சி எடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் புனித தேவசகாயத்துக்கென்று வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கென்று திருச்சூரிலிருந்து புனித தேவசகாயம் சொரூபம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் வாங்கி அதை சலேத் அன்னை கெபியில் வைத்து ஸ்தாபித்து பவனியாக ஆலயத்திற்கு கொண்டுவந்த பெருமையும் பங்குத்தந்தை குரூஸ் கார்மலையே சாரும்.
மகிமை பெருகுகிறது
மேலும் இந்த ஆலயம் தொடர்பாக மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் கூறியதாவது:-
கோட்டார் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் மேலப்பெருவிளை பங்கும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஜெபமாலை அன்னையும், சலேத் அன்னையும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதனை ஆலயத்துக்கு நன்றி செலுத்த வரும் பக்தர்களின் மூலமாக காண முடிகிறது. அதனால் அன்னையின் மகிமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்த ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு மறைக்கல்வி குழந்தைகளுக்கான திருப்பலியும் நடைபெறுகின்றன. ஞாயிறுதோறும் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மறைக்கல்வியும், தொடர்ந்து 10.30 மணி முதல் அனைத்து சிறார் இயக்கங்களும் செயல்படுகின்றன. மாதத்தில் ஒருநாள் மறைக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
உறுதிமொழி
இதுதவிர கடந்த ஆண்டு முதல் மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுவர்களுக்கான ஆங்கில திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறைக்கல்வி மாணவர்களுக்கென்று ஞாயிறு காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அதில் மறைக்கல்வி மாணவர்களே, இசைமீட்டி பாடலும் பாட முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் அக்ேடாபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2-வது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.
இங்கு ஏற்கனவே மறைக்கல்வி, பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிராம பெண்கள் சங்கம் ஆகியன செயல்பட்டு வந்தன. நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு நற்செய்தி பணிக்குழு, குடும்பநலப் பணிக்குழு, கைகள் தன்னம்பிக்கை இயக்கம், பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை, திருஇருதயநாதர் சபை, வழிபாட்டுக் குழு, கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் பணிக்குழு, கார்மல் சபை என பல சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு மக்களும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
இறையருளில் பிறந்து, பங்குதந்தையர் பணியில் வளர்ந்து, இணை தந்தையர்கள் உழைப்பில் உயர்ந்து முழுமை பெற்ற இந்த ஊர் சலேத்அன்னையின் அடிச்சுவட்டில் ஊரின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டுகிற சமூகமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயில்ய திருவிழா 14-ந் தேதி புணர்தம் நாளில் தொடங்குகிறது.
- 16-ந்தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.
இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. அதே சமயத்தில் இங்கு நாகர் ஆராதனை மையத்தில் புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தில் தரிசனம் நடத்துவது என்பது திருவிதாங்கூர் மன்னர்களின் ஒரு விரதமாகவே கடை பிடிக்கப்பட்டு வந்தது.
ஐப்பசி ஆயில்யம்
ஒரு முறை வழக்கம் போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்து ஐப்பசி மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கோவில் சொத்துக்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமானது.
புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்ய விழா இன்றும் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவராத்திரி சிவபெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தன்று முக்கிய விழாவாக
கொண்டாடப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி நடைபெறுகிறது.
சிறப்பு வழிபாடு
ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பூஜை நேரம்
மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.
14-ந் தேதி திருவிழா
நடப்பாண்டின் ஆயில்ய திருவிழா குறித்து மண்ணாரசாலை நாகராஜா கோவிலின் நம்பூதிரி எம்.கெ. பரமேஸ்வரன் கூறுகையில், ஆயில்ய திருவிழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) புணர்தம் நாளில் தொடங்குகிறது. 16-ந் தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.
- கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.
- இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர்: கொற்றவாளீஸ்வரர்
அம்மன்: நெல்லை அம்பாள்
தீர்த்தம்: மது புஷ்கர்ணி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.
இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.
இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால், அவருக்கு 'கொற்றவாளீஸ்வரர்' என்று பெயர் வந்தது.
மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு 'ராஜகட்க பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் 'திரிபுவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.
கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.
- இந்த திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
- தாயாரின் திருப்பெயர் பரிமள ரங்கநாயகி நாச்சியார் ஆகும்.
இறைவன்: பரிமள ரங்கநாதர்
இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
கோவிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார்.
ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார்.
தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.
இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30
கோவிலின் முகவரி:
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,
திருஇந்தளூர்,
மயிலாடுதுறை 609003.
- இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது.
- சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த கோவில்.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்.' இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.
இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.
கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும். கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.
- நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
- நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.
நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.
பரிகாரத்தலம்
நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.
குழந்தை பாக்கியம்
கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
மன்னர் நோய் நீங்கியது
இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.
அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
சன்னதிகள்
இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.
நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
- பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
- புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.
சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.
ஆலய அமைப்பு
இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.
இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.
திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்