search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (9-ந்தேதி) எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது போல இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்திய அணி தனது அதிரடியை நீட்டித்துக் கொள்ளவும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் சவாலாக இருக்கும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் நேர்த்தியாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதேபோல புவனேஷ்வர் குமாரும், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் மீதான எதிர்பார்ப்பு நாளைய ஆட்டத்திலும் இருக்கிறது. இதேபோல டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், தவான், கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்களும் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆடுகளத் தன்மையை பொறுத்து மாற்றம் செய்யப்படலாம்.

    ஆஸ்திரேலிய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தியாவை வீழ்த்தி அந்த அணி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சம பலத்துடன் திகழ்கிறது.



    பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பந்து வீச்சாளரான நாதன் கவுல்டர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    லண்டனில் நேற்று பெய்த மழையால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இந்த வார இறுதி வரை மழை வாய்ப்பு இருப்பதால் நாளைய ஆட்டம் பாதிக்குமா? என்ற அச்சமும் இருக்கிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் கார்டிப் மைதானத்தில் நேற்று மோத இருந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழையால் ரத்து செய்யப்பட்டது.

    இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவிடம் மோதிய ஆட்டத்தில் 35 ரன்னில் தோற்று இருந்தது. இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படுத்த வேண்டும். உலகக்கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலியா 8-3 என்ற அளவில் முன்னிலையில் இருக்கிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
    லண்டன் :

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தனது இரண்டு ஆட்டங்களிலும் (ஆப்கானிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள்) வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இதற்கிடையே, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் நாளை இந்திய அணியை எதிர்கொள்கிறது.



    இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய  அணியின் துணை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வீழ்ந்தனர். அதேபோன்ற யுக்தியை ஓவலில்  நடைபெற உள்ள போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி  பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் எங்களுக்கு எதிராக நடுவர்கள் செயல்பட்டனர் என வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் குற்றம்சாட்டினார்.
    நாட்டிங்காம்:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த ஆட்டத்தில் நடுவர்கள் கிறிஸ் கப்பானி (நியூசிலாந்து), ருச்சிரா பாலியாகுருகே (இலங்கை) ஆகியோரின் தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பின. அவர்கள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்து கொண்டது போலவே தெரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் புயல்வேக பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லுக்கு (21 ரன்) பேட்டில் படாத பந்துக்கு நடுவர் கப்பானி விரலை உயர்த்தினார். இதே போல் ஸ்டம்பை விட்டு விலகிச் சென்ற பந்துக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இரண்டு முறையும் கெய்ல் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். கெய்ல் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய பந்தை மிட்செல் ஸ்டார்க் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியதை நடுவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார்கள்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் எங்களுக்கு எதிராக செயல்பட்டனர் என வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

    இதை சொல்வதால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது தெரியாது. ஆனால் நடுவர்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் எங்களுக்குரிய டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களது காலுறையில் (பேடு) பந்து படும்போதெல்லாம் அவுட் என்று நடுவர் விரலை உயர்த்துகிறார்.

    ஆனால் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் போது அவர்களது காலுறையில் பந்து படும்போது எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டால் நடுவர் கையை தொங்கப் போட்டு விடுகிறார். அதற்கு நாங்கள் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தி எப்போது ரீப்ளேயை பார்த்தாலும் பந்து ஸ்டம்பை விட்டு விலகிச்செல்கிறது. அதே சமயம் நாங்கள் பேட்டிங் செய்யும் போது இதைச் செய்தால் பந்து ஸ்டம்பை தாக்குகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்பத்தை அறியாதவன் அல்ல. ஆனாலும் இது ஏன் நடக்கிறது என்பது புரியவில்லை.

    இந்த போட்டியில் மட்டுமல்ல, சில ஆண்டுகளாகவே இது போன்ற பிரச்சனைகளை பார்த்து வருகிறேன் என தெரிவித்தார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து-வங்காளதேசம், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

    கார்டிப்பில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

    இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் பணிந்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 349 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியால் 9 விக்கெட்டுக்கு 334 ரன்களே எடுக்க முடிந்தது. ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

    மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி வீழ்ந்தது. துடிப்பு மிக்க இளம் வீரர்களை கொண்ட வங்காளதேச அணிக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை வகையாக பிடித்துக்கொண்டு ஆட்டத்தில் ஏற்றம் காண்பதுடன், எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் படைத்தது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. எனவே இந்த ஆட்டம் வங்காளதேச அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காலையில் ஈரப்பதமான காற்று வீசும் என்றும் பின்னர் வெயில் அடிப்பதுடன் மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ‘டாஸ்’ வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

    வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.



    மற்றொரு போட்டி: டவுன்டானில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.

    குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும், 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோல்வி கண்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ஷேசாத் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர அதிக ஆர்வம் காட்டும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க போராடும். நியூசிலாந்து அணியின் சவாலை சமாளிக்க ஆப்கானிஸ்தான் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் எனலாம். போட்டி நடைபெறும் டவுன்டானில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் பிற்பகலில் மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், நூர் அலி ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், ஹமித் ஹசன், முஜீப் ரகுமான்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயத்தால் விலகியுள்ளார்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பராக இருப்பவர் முகமது ஷேசாத் . கீப்பிங் பணியை திறம்பட செய்வதுடன் தேவையான நேரங்களில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அதிரடி பேட்ஸ்மேனும் கூட. 

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பரான முகமது ஷேசாத் பயிற்சி ஆட்டத்தின் போது கால்முட்டியில் காயமடைந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் ஆடிய போது காயத்தன்மை அதிகமாகி விட்டது.

    இதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷேசாத் விலகியுள்ளார். ‘ஆப்கானிஸ்தான் அணியின் டோனி’ என்று அழைக்கப்படும் 32 வயதான ஷேசாத் 84 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 6 சதம் உள்பட 2,727 ரன்கள் எடுத்துள்ளார். 

    காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறிய முகமது ஷேசாத்துக்கு பதிலாக, இக்ரம் அலி என்ற விக்கெட் கீப்பர் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    குடிநீரை வீணாக்கியதால் குருகிராம் மாநகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
    குருகிராம்:

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அணி வரும் 9-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விராட் கோலி.

    இந்நிலையில் குருகிராம் மாநகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

    கோலி டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலி வீட்டுக்கு வந்த குருகிராம் மாநகராட்சி பறக்கும்படை அதிகாரிகள், அங்கு அவரது வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள், காரை கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

    இது குறித்து குருகிராம் மாநகராட்சி அதிகாரி யாஷ்பால் யாதவ் கூறியதாவது:-
     
    வட மாநிலங்களில் வறட்சி அதிகமாகியுள்ளதால் குடிநீருக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி குருகிராம் பகுதியும் கடும் வறட்சியில் உள்ளது. எனவே ``குடிநீரை வீணாக்கக் கூடாது. அப்படி வீணாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

    இந்த எச்சரிக்கையை மீறி குடிநீரைக் கொண்டு கார்களை கோலியின் ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதால் ரூ.500 அபராதம் விதித்துள்ளார்கள். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கோலி ஒரு கார் பிரியர் என்பதால் தனது வீட்டில் அரை டஜன் கார்களை நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    பிரிஸ்டல்: 

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

    இந்நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. போட்டி தொடங்கும் வேளையில் மழை தீவிரமாக பெய்ய ஆரம்பித்ததால், ஆடுகளம் ஈரப்பதமானது. இதனால் டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே ஆட்டம் கைவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு உள்ளது

    இதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் புள்ளிகள் பட்டியலில், முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
    உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஷேசாத்தை மாற்ற ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது. அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும், அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வருபவர் முகமது ஷேசாத்.

    ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைக்க இவரது ஆட்டம் முக்கியமானதாக இருந்தது என்றால் அது மிகையாகாது. இவர் உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.

    இந்த இரண்டு ஆட்டங்களிலும் ஷேசாத் விளையாடினார். அவரது மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஐசிசி-யிடம் மாற்றும் வீரரை தேர்வு செய்ய ஆப்கானிஸ்தான் வேண்டுகோள் வைத்தது. இதை ஏற்ற ஐசிசி டெக்னிக்கல் கமிட்டில் ஒப்புதல் வழங்கியது. அதன்படி இக்ராம் அலி கில்-ஐ மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் தேர்வு செய்துள்ளது.



    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டிக்கான பயிற்சியில் ஷேசாத் கலந்து கொண்டு, தான் உடற்தகுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கன் அதிரடியாக நீக்கப்பட்டு, குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மூத்த வீரர்கள் கடும் விமர்சனம் செய்தனர். மேலும், ஷேசாத் வீரர்கள் அறையில் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
    இந்தியாவின் துணை ராணுவ படையின் முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி வேண்டுகோள் விடுத்த நிலையில் டோனி பிடிவாதமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த புதன் கிழமை(ஜூன் 5) இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்ப்ர் மகேந்திர சிங் டோனி அணிந்திருந்த கிளவ்ஸில் இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். பாலிடான் முத்திரையை அணிய துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு டோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. இந்த புகைப்படம் டோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என  ஐசிசி கோரிக்கை வைத்தது. மேலும் ஐசிசி-யின் விதிப்படி வீரர்கள் மதம்,அரசியல் மற்றும் இராணுவம் போன்ற விஷயங்களை தாங்கள் அணியும் உடைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் டோனிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. டோனி தொடர்ந்து அந்த கிளவ்சை அணிந்துகொள்ள அனுமதிக்கும்படி ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. டோனி அணிந்திருப்பது துணை ராணுவ முத்திரை அல்ல என்றும், ஐசிசி விதிமுறைகளை அவர் மீறவில்லை என்றும் பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

    இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி தொடர்ந்து பயன் படுத்திவருவதாகவும் தன் நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் டோனி ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என நெட்டிசன்களும் இந்திய ரசிகர்களும்  தோனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 9) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 92 ரன்கள் குவித்ததன் மூலம் கவுல்டர் நைல் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழந்து திணறியபோது 8-வது வரிசையில் களம் இறங்கிய ஆல் ரவுண்டர் நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாடினார். அவர் 60 பந்தில் 92 ரன் குவித்தார். இவர் 92 ரன்கள் குவித்ததே ஆஸ்திரேலியா 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

    கவுல்டர் நைல் அடித்த 92 ரன்களே உலகக்கோப்பை போட்டிகளில் 8-வது வரிசை வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயின் ஹீத் ஸ்ட்ரீக் 8-வது வரிசையில் 72 ரன் எடுத்து இருந்தார். அந்த சாதனையை நாதன் கவுல்டர் நைல் முறியடித்துள்ளார்.

    ஒட்டு மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் 8-வது வரிசை வீரர்களில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 95 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த ரன்னை அவர் 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அடித்தார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 ரன்னில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
    நாட்டிங்காம்:

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நாட்டிங்காமில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 15 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 79 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் சுமித் - அலெக்ஸ் கேரி ஜோடி சிறப்பாக விளையாடியது. கேரி 45 ரன்னிலும், சுமித் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 8-வது வீரராக களம் இறங்கிய நாதன் கவுல்டர் - நைல் அதிரடியாக விளையாடினர். அவர் 60 பந்தில் 92 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.

    ஆஸ்திரேலியா 49 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியால் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்னே எடுத்தது. இதனால் 15 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் முதல் தோல்வியை சந்தித்தது.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது:-

    இந்த தோல்வி உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. போட்டியில் நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம் என்று நினைத்தேன். அனேகமாக நாங்கள் சிறிது உத்வேகத்தை காட்ட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற சில ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகிவிட்டோம்.

    ஆனாலும் இப்போட்டியில் இருந்து நிறைய நேர்மறை வி‌ஷயங்களை எடுத்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நாதன் கவுல்டர் நைல் 60 ரன்னில் இருந்தபோது அவரது கேட்சை தவறவிட்டோம்.



    அதன்பின் அவர் 30 ரன்கள் சேர்த்து விட்டார். இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம். இன்னும் போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் இன்னும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியா தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 9-ந்தேதி இந்தியாவுடன் மோதுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி 10-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
    பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
    பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது.

    இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    ×