search icon
என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. அப்போது தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறி வைத்து கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டனர்.

    தோட்டங்களில் புகுந்து விவசாயிகளை தாக்கி நள்ளிரவு நேரங்களில் தக்காளி பழங்களை பறித்து சென்ற சம்பவங்களும் நடந்தன.

    அதே நிலை தற்போது ஆந்திராவில் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் கொள்ளை கும்பல் தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறிவைத்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகலிலை சேர்ந்தவர் நயாஸ்.

    தக்காளி வியாபாரியான இவர் தனது வேனில் தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு ஐதராபாத் சென்றார். ஐதராபாத் மார்க்கெட்டில் தக்காளியை விற்றுவிட்டு மீண்டும் முல்பாகல் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார்.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் வேனை நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் டீ குடித்தார். அங்கிருந்த கும்பல் ஒன்று நயாஸ் தக்காளி விற்றுவிட்டு வருவதால் அவரிடம் ஏராளமான பணம் இருக்கலாம் என எண்ணினர்.

    டீ குடித்து முடித்த பின்னர் நயாஸ் வேனை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்போது டீக்கடையில் இருந்த கும்பல் தங்களது காரில் நயாஸ் வேனை பின் தொடர்ந்து சென்றனர். நயாஸ் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். கும்பல் அவரை 250 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர். காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.

    காரில் இருந்து இறங்கிய கும்பல் நயாசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் மீண்டும் தப்பிச் சென்றனர். இது குறித்து நயாஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    தக்காளி வியாபாரியை குறிவைத்து கும்பல் கொள்ளையடித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தக்காளி வியாபாரிகள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    • ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
    • திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்ப விருட்ச வாகனத்தில் பாலித்தனர். 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் 4 உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று மாலை நடக்கிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து நேற்று மாலை முதல் லட்சக் கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

    திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. கருட சேவையை காண மாட வீதிகளில் 2 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    மாலை 6.30 மணிக்கு ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். இந்த ஆண்டு கருட சேவை நள்ளிரவு வரை நடக்க வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்கு செல்ல இன்று காலை முதல் இரவு வரை அனுமதி மறுக்கப்பட்டது.

    திருப்பதியில் நேற்று 81,481 பேர் தரிசனம் செய்தனர். 38,762 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரமும், ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தால் திருமலை அதிர்ந்தது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
    • ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

    பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா.
    • திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்திருளினார். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நாளை நடக்கிறது. இந்த ஆண்டு கருட சேவை வழக்கத்தை விட 30 நிமிடம் முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இரவு 11 மணி வரை மாட வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பல்வேறு நகை அலங்காரங்களுடன் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி க்கு மேல் இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் திருப்பதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எந்தெந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம் என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் சென்னை மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருட சேவையொட்டி ஆந்திர மாநில போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தவிர மாட வீதியில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்தும் நின்றபடியும் கருட சேவை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மாடவீதிகளில் உள்ள கேலரிகளுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும் கூடுதல் இடங்களில் அன்னதானம் பால் போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா.
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 2-இரண்டாவது நாளான நேற்று காலை ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். நேற்று மாலை திடீரென 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்து அவதி அடைந்தனர். நேற்று இரவு ஏழுமலையான் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடன கலைஞர்கள் சாமி ஊர்வலத்தில் முன்பாக கண்ணைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 75 552 பேர் தரிசனம் செய்தனர் 35 885 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய கெங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
    • நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு அவர் ஒளி.

    நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் எம்.ஜி.ஆர். குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. 'அதிமுகவின் 53-வது தொடக்க நாளான அக் 17ஆம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

    மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் மொழி ஆசிரியரால்தான் புரட்சித் தலைவரின் முதல் அறிமுகம் கிடைத்தது.

    திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார்.

    'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

    உடையானாம் வேந்தர்க் கொளி'.

    நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு அவர் ஒளி.

    இவ்வாறு எம்.ஜி.ஆர். குறித்து பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு 'சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். இதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 'லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ' என்று கூறினார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பவன் கல்யாண் பதிவிட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் கவனிக்கப்படுகிறது.


    • திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சை முடிவதற்குள் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்ததுடன் அதுபோன்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், திருப்பதியில் அன்னதான கூடத்தில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    • பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும்.

    திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
    • முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வாஸ்திரத்தை கொண்டு வர உள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

    இந்நிலையில் திருப்பதி கோவிலில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது. தங்கக்கொடி மரத்தில் இருந்த வளையம் கழன்று விழுந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • வைர கிரீடம், வைர பொட்டு வைத்து அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    ஆந்திர மாநிலம், இந்திர கிளாத்திரியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    மும்பையை சேர்ந்த சவுரப் என்பவர் ரூ.2.50 கோடி மதிப்பில் வைரத்திலான கிரீடத்தையும், ஐதராபாத் கொண்டாபூரை சேர்ந்த சூரியகுமார் என்பவர் வைரத்திலான பொட்டும், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வைரம் பொறிக்கப்பட்ட சூரியனையும் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினர்.

    வைர கிரீடம், வைர பொட்டு மற்றும் வைரம் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கி உள்ளது.
    • வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து, திருப்பதி கோவிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என்றும் எங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை" என்று மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கி உள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளதை அடுத்து வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

    ×