search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது
    • முதற்கட்டாக அறிவித்ததில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், நேற்றிரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெட்டல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    துணை பெண் கலெக்டரான நிஷா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு இன்னும் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

    முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    • மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல் மந்திரியும், மாநில தலைவருமான கமல்நாத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    • 5 மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
    • வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவீதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன.

    போபால்:

    மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17, மிசோரமில் நவம்பர் 7, ராஜஸ்தானில் நவம்பர் 23, தெலங்கானாவில் நவம்பர் 30-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.

    இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை ஊக்குவிக்க உணவகங்கள் புதுமையான முயற்சியை அறிவித்துள்ளன. அதன்படி நவம்பர் 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களுக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ இலவசமாக வழங்கப்படும் என்று இந்தூரில் '56 சப்பன் துக்கன்' எனும் பல்வேறு உணவுவகைகள் விற்கும் உணவகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவீதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன. மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    • ம.பி. சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு
    • ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ததியா (Datia) நகரில், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முந்தைய ம.பி. முதல்வருமான கமல்நாத்தை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நான் பதவியேற்ற போது ம.பி. எப்படி இருந்தது என உங்களுக்கு தெரியும். துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், கும்பலாக அப்பாவி மக்கள் கடத்தப்படுவது, கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்படுவது, கொள்ளையர்கள் அப்பாவி மக்களை அடித்து நொறுக்குவது போன்றவைதான் ம.பி.யின் அடையாளமாக இருந்து வந்தது. நான் முதல்வரானதும் குவாலியருக்கு வந்தேன். காவல் அதிகாரிகளை சந்தித்து, 'ம.பி.யில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது கொள்ளையர்கள் இருக்க வேண்டும்' என கூறி உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். காங்கிரஸ் ம.பி.யை ஆளும் போதெல்லாம் மக்களுக்கு நாசமும் இழப்புமே மிஞ்சுகிறது. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்த போது எந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றவும் 'பணம் இல்லை, பணம் இல்லை' என புலம்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் அழுகின்ற இவரை போன்ற மனிதர் மீண்டும் முதல்வரானால் நன்றாக இருக்குமா?

    இவ்வாறு சவுகன் பேசினார்.

    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என பிரியங்கா குற்றம்சாட்டினார்.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் மொத்த மக்கள் தொகையில் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால், அரசு வேலைவாய்ப்பில் அந்த சமூகத்தினர் மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே, அவர்களின் துல்லியமான எண்ணிக்கையை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 18 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைவுபடுத்தி, ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள்.

    பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

    சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

    100 யூனிட்வரை இலவச மின்சாரமும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக்கும் வழங்கப்படும். 5 குதிரை சக்திவரை கொண்ட மோட்டார் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

    முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்புவரை இலவச கல்வி அளிக்கப்படும்.

    மேலும், முதல் வகுப்பு முதல் 8-ம்வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.500-ம், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.ரூ.1,000-ம், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    போபால்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாடோல் நகருக்கு பிரசாரத்தில் பங்கேற்கச் சென்றார்.

    அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. ஆய்வகத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் பணம் திருடப்படுகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் நடக்காது, மத்திய பிரதேசத்தில்தான் நடக்கும்.

    இன்று ஆதிவாசிகளுக்கு என்ன உரிமைகள் வழங்க வேண்டும், ஓபிசி, எஸ்.டி. பிரிவினருக்கு என்ன பங்கு கொடுக்க வேண்டும்? இதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி, அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என பேசுகிறோம் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் 9 முறை ம.பி. சென்றுள்ளார்
    • அமித் ஷா கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார்

    ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில்தான் நேரடி போட்டி. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இரண்டு கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. என்றாலும், ஆளும் பா.ஜனதா கட்சியே தேர்தல் பணியில் முன்னணி வகிக்கிறது.

    பிரதமர் மோடி 9 முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார். பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார். பா.ஜனதா கட்சி ஆகஸ்ட் 17-ந்தேதியே முதற்கட்டமாக 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது வரை 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.

    அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மூன்று முறை தேர்தல் பிரசாரம் தொடர்பாக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். ஜபால்புரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி இதுவரை ஒரேயொரு தேர்தல் பேரணியில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

    பா.ஜனதாவினர் மக்களிடையே நேரடியாக மிகப்பெரிய அளவில் சென்றடைந்துள்ளனர். அக்கட்சி ஜன் ஆஷிர்வாத் யாத்திரை மூலம் 223 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 3-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 25-ந்தேதி வரை நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சி ஜன் ஆக்ரோஷ் யாத்திரை மூலம் 230 தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது.

    • மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
    • பெண்களை நீங்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க்கிறீர்கள்.

    போபால்:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. அதை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஆதரித்தோம். ஆனால் 10 ஆண்டுகளுக்குப்பின்னர்தான் அதாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டால் இந்த மசோதாவால் பயன் என்ன? பெண்களை நீங்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க்கிறீர்கள். இடஒதுக்கீடு எங்கள் உரிமை' என கூறினார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 84 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்த பிரியங்கா, ஆனால் அரசு பணிகளில் அவர்களது பங்களிப்பு இல்லை என்றும், இது குறித்து கேட்டால் பா.ஜனதாவினர் மவுனமாகி விடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
    • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

    பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

    இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • ஹெலிகாப்டர் துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று பெராசியா காவல் நிலைய கண்காணிப்பாளர் நரேந்திர குலாஸ்த் தெரிவித்தார். போபாலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இந்திய வான்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏரி போபால் விமான நிலையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. போபால் மற்றும் நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டரை சரி செய்துள்ளனர்.

    • சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது

    சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

    காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    "நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.

    "கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை
    • பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகன் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கான பொதுத்தேர்தல், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும்.  ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

    இன்று, அம்மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில், களபிப்பல் பகுதியில் ஒரு பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரை அவர்களின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை. நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் வகுப்பதற்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களுக்கோ எம்.பி.க்களுக்கோ எந்த அதிகாரமோ பங்களிப்போ இல்லை. கேபினெட் செயலர்கள் மற்றும் 90 அதிகாரிகளை கொண்டுதான் நாடே இயக்கப்படுகிறது. அதிகாரவர்க்கமும், ஆர். எஸ்.எஸ். பிரதிநிதிகளும்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக மத்திய பிரதேச மாநிலம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராகுல் அறிவித்தார்.

    ×