search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • இறந்ததாக நினைத்து இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
    • டாக்டர் வந்து பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது.

    மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். உடனே டாக்டருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மாலையும் கழுத்துமாக அசைவற்று கிடந்த ஜீது பிரஜாபதியை பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று இறந்ததாக நினைத்த நபர் உயிருடன் எழுந்த நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. 

    • சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
    • முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

    போபால்:

    மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது. அந்த மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம்சாட்டினார். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தந்திருக்கலாம் என்றும் கூறினார்.

    'மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம். 6,000 ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என எங்களுக்கு தெரியாது' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது.
    • மக்ராணியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆயஷா பாத்திமா (23) மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயஷா மக்ராணி (26). இருவரும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இதில் ஆயஷா பாத்திமாவும், ஆயஷா மக்ராணியும் ஒரே பதிவு எண்ணுடன் ஒரே ரேங்க்கில் (184வது ரேங்க்) தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி இருந்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும்பட்சத்தில் அந்த 184வது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியும் எழுந்தது.

    இதையடுத்து, சுமார் 200 கி.மீ இடைவெளியில் வசிக்கும் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல்துறையில் யுபிஎஸ்சி மோசடி செய்துள்ளதாகக் கூறி விளக்கம் கேட்டு புகார் அளித்தனர்.

    இருவரும் தங்களது அட்மிட் கார்டுகளை சமர்ப்பித்தனர். அதில், இருவருக்கும் ஒரே பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், மக்ரானியின் அட்மிட் கார்டில், ஆளுமைத் தேர்வின் தேதி ஏப்ரல் 25 (வியாழன்) என்றும், பாத்திமாவின் தேதியில் ஏப்ரல் 25 (செவ்வாய்கிழமை) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது. அதே சமயம் மக்ரானியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    இந்நிலையில், தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184வது ரேங்க் ஆயஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவளால் மறக்க முடியாத ஒரு வலியை கொடுத்திருக்கிறேன் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
    • சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.

    தேவாஸ் நகரில் போலீஸ் டிரைவராக பணியாற்றி வந்த சுபாஷ் கராதி (வயது 26), நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது காதலியின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண், அவரது தந்தை, சகோதரர் என அனைவரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இறந்துவிட்டதாக நினைத்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு துரோகம் செய்ததால் அவளை கொன்றுவிட்டேன். அவளால் மறக்க முடியாத ஒரு வலியை அவளுக்கு கொடுத்திருக்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

    ஆனால் அந்த பெண் உயிரிழக்கவில்லை. அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். அந்த பெண்ணும், சகோதரரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
    • 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுவனை 3 சிறுவர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெறித்து பெரிய கல்லால் மண்டையை உடைத்து, கத்தியால் தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து தங்கள் வீட்டு அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதை அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 3 சிறுவர்களை கைது செய்தனர். இதில் ஒருவனுக்கு 11 வயதுதான் ஆகிறது. மற்றவர்களுக்கு முறையே 14, 16 வயதாகிறது.

    3 சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு 14 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா சர்மா கூறியதாவது:-

    பணத் தகராறில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் திட்டமிட்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் தொண்டையை அறுத்துள்ளனர். 3 சிறுவர்களும் பழக்கமான கொலையாளிகளை போல இந்த கொலையை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திடீரென்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் மாணவி, தனது தந்தைக்கு போன் செய்து தான் ரிக்ஷாவில் ஏறியபோது ரிக்ஷா டிரைவர் தனது வாயை துணியால் பொத்தி மயக்க மடைய வைத்து கடத்தி சென்றதாக கூறினார்.

    சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடத்தல் காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை.

    இதற்கிடையே உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

    • மத்திய பிரதேச மாநில வீட்டுவசதித் துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
    • இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப் எண்ட் டிவி மாடல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையின் போது கண்டறிந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் வீட்டுவசதித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார் 36 வயதான ஹேமா மீனா. பணியில் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

     

    ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹேமாவின் வீட்டில் நடத்திய திடீர் ஆய்வின் போது, அவரின் வீட்டில் இருந்த கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பொருட்களை கண்டு பிடித்தனர். இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை, மொபைல் ஜாமர்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்தனர். இது ஹேமா வாங்கும் மாத சம்பளத்தை விட 232 சதவீதம் வரை அதிகம் ஆகும். ஹேமா முதலில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை தனது தந்தை பெயரில் வாங்கி, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார்.

    ஆடம்பர வீடு மட்டுமின்றி ரைசன் மற்றும் விதிஷா மாவட்டங்களிலும் நிலம் வைத்திருக்கிறார். முதற்கட்ட ஆய்வுகளின் படி இவர் வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பொருட்களை கொண்டு தனது வீட்டை கட்டியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

    கர்கோன் மாவட்டத்தின் டோங்கர்கான் பகுதியில் உள்ள போரட் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வறண்டுபோன போரட் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்து குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர். 3 சிறுவர்கள் உள்பட 23 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளர்.

    இதுதொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்கோனில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    • மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    கார்கோன் மாவட்டம் டோங்கர்கான் என்ற கிராமத்தில் உள்ள ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் மணற்பரப்பில் பஸ் விழுந்தது.

    இதனால் பஸ்சில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். விழுந்த வேகத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆற்றில் தண்ணீர் இருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும். விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்து உள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

    • வாலாபாயை ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் மற்றும் வார்டு ஊழியர்கள் கூட அங்கு இல்லை.
    • மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வந்து வாலாபாய் மற்றும் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் அருண்பரிஹார். இவரது மனைவி வாலாபாய் கர்ப்பமாக இருந்தார்.

    நேற்று வாலாபாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருண் பரிஹார் மருத்துவ உதவிக்காக அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை.

    எனவே வேறு வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார மையத்திற்கு அவரது மனைவியை அழைத்து சென்றார். ஆனால் அங்கும் போதிய ஊழியர்கள் இல்லை என கூறப்படுகிறது.

    வாலாபாயை ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் மற்றும் வார்டு ஊழியர்கள் கூட அங்கு இல்லை. இதனால் ஆஸ்பத்திரி முன்பு வளாகத்திலேயே வாலாபாய்க்கு பிரசவமாகி பெண் குழந்தை பிறந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் திரண்டது.

    பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வந்து வாலாபாய் மற்றும் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அருண் பரிஹார் கூறுகையில், மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியமாக இருந்தனர்.

    டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சுற்றி இருந்த நிலையிலும் யாரும் உதவிக்கு வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
    • வரி விலக்கை முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    போபால்:

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    • இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
    • துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

    மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் மற்றொரு தரப்பு சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலத்தகராறு மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×