என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
- தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ள கோபனாரி, முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர் மேற்பார்வையில் டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியாகி உள்ளது. இதனால் சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மற்றும் அவை விட்டு செல்லும் பழங்களை தின்பதாலும் பாதிப்பு உருவாகும்.
மேலும் வவ்வால்கள் மூலம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நோய் பரவி மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். இந்த வகை காய்ச்சல் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கும் நோய் பரவ வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரசால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவையொட்டி அமைந்து உள்ள காரமடை முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
- கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
- வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அன்னூர் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
இதனை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் குட்டையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு ஆழத்தில் பதுங்கிய முதலையை பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக குட்டையில் உள்ள தண்ணீரை 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.
சுமார் 30 மணிநேரத்துக்கு பிறகு குட்டையில் இருந்த தண்ணீர் முழுமையாக வற்ற தொடங்கியது. அப்போது வற்றிய குட்டையின் ஆழத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முதலை பதுங்கி கிடப்பது தெரியவந்தது.
தொடர்ந்து வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் தப்பிவிடாத அளவுக்கு கயிறுகள் மூலம் பிணைக்கப்பட்டன. தொடர்ந்து குட்டைக்குள் கிடந்த முதலையை தோளில் தூக்கியபடி வனத்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த முதலை பவானிசாகர் அணையில் ஆழமான பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை உயிருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதலையை பிடிக்க போராடிய வனத்துறையினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இங்கு 2 முதலைகள் இருப்பதாக தகவலின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அங்கு ஒரு முதலை மட்டுமே பிடிபட்டது. அந்த முதலை அணைப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது என்றனர்.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் முழக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ள மது ஒழிப்பு மாநாடும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுகிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இன்று கோவை விமான நிலையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தபோது, தொண்டர்கள் அவரை வரவேற்கும்விதமாக, "வருங்கால முதல்வர் அண்ணன் திருமாவளவன்" என கோஷமிட்டனர். இந்த கோஷம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
- உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல். காய்கறி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
அருள்வேல் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஆண் நாய்க்குட்டி ஷேடோ ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த நாய் பின்னாளில் அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டது.
இந்த நிலையில் ஷேடோ நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்தது. அப்போது தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் கடித்து குதறின. இதில் ஷேடோவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் நாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாயை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் கண்ணீருடன் ஷேடோ நாயை வீட்டுக்கு கொண்டுவந்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
வாழ்வில் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈம காரியங்கள் செய்வோமோ அதேபோல இறுதி சடங்குகள் செய்வதென அருள்வேல் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
பின்னர் இன்று காலை அந்த நாய் அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் வளர்ப்பு நாய் ஷேடோ அடக்கம் செய்யப்பட்டது.
- இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும்.
- திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.
கோவை:
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தலின்போதே முதல் 100 நாட்களுக்கு பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும். ஆகவே நீங்கள் இந்த அரசை பற்றி எடை போட 100 நாட்கள் போதுமானதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். ஏறக்குறைய இந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக பா.ஜ.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
மத்திய மந்திரி நிதின்கட்கரி, சென்னை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்திருந்தார். மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடி ஆனாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கையப்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் நினைத்த வேகத்தில் பணியை செய்ய முடியவில்லை என தெரிவித்து இருந்தார். ரெயில்வே மந்திரியும் இதேபோல கருத்தை தெரிவித்து உள்ளார்.
இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுதுபார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இந்த திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் சாதி வந்து விடும். அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.
நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா என்றால் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற தகுதி இல்லாதவர். நான் காலாவாதியாகிவிட்டேன் என கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு 67 வயது ஆகிறது. அவர் மகன் இறந்ததால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் இதுபோன்று பேசினால் அரசியலில் இருந்து காலாவதியாகி விடுவார். ராகுல்காந்தி பற்றிய நான் தெரிவித்த கருத்துக்காக கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். நான் உண்மையை தான் பேசி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் கண்காணிப்பு.
- 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கோவை:
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்த நிலையில் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
- நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
- முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பின்னர் மறுகால் பாய்ந்து பவானி ஆற்றை சென்றடைகிறது.
இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் தற்போது வரை 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி உள்ளது.
இந்த நிலையில் பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் ஒரு முதலை பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால் அந்த முதலையை பிடிப்பது வனத்துறைக்கு சவால் மிகுந்த பணியாக உள்ளது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாத அளவில் வனத்துறையின்ர் வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்வையிட்டனர்.
அப்போது நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே நீர்வழிக்குட்டையில் தண்ணீர் வற்றத்தொடங்கி உள்ளதால் அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் உடனடியாக நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
- கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம்.
- இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு.
கோவை:
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அண்ணாபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.
இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
- மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.
கோவை:
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது.
ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.
இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.
இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறி சிங்காநல்லூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சதீஷ், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வரும் ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டை எடுத்துள்ளார். நான் வீடியோ எடுத்து பரப்பவில்லை எனவும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் கூறியதாவது:-
நான் பாரதீய ஜனதாவில் கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை பொறுப்பு வகித்துள்ளேன். கடந்த 31-ந் தேதியே எனது பதவி காலம் முடிந்து விட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்துள்ளார்.
மற்றொன்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமையும், தேசிய தலைமையும் தான் செய்வார்கள். அதையும் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.
இந்த பிரச்சனையில் வீடியோ எடுத்தது அங்கிருந்த 4, 5 பேர் தான். நான் அந்த வீடியோவையே இதுவரை சரியாக கூட பார்க்கவில்லை. இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. அந்த தகவலை தான் நான் பிறருக்கு அனுப்பினேன். பார்வேட் செய்தது தவறு என்றால் வீடியோ வெளியிட்ட நபர் மீது கட்சி விரோத நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
- கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.
கோவை:
கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.
மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.
இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.
அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.
என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.
நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.
கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
- மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
கோவை:
கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
ஓணம் பண்டிகை யையொட்டி கோவை சுந்தராபுரம், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலத்தை சுற்றிலும் பாடல்கள் பாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர்.
ஓணம் தினத்தின் முக்கிய நிகழ்வாக மலையாள மக்கள் இன்று வீடுகளில் காலையில் கனி கண்டு கடவுளை வணங்கி வழிபாடுகள் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கோவில்களுக்கு சென்றும் ஒருவருக்கு ஒருவர் வழத்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிர்மால்ய பூஜை மற்றும் சீவேலி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
மேலும் 2 ஆயிரம் கிலோ பூக்களால் பிரமாண்டமாக அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
மேலும் மாவட்ட அளவிலான கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த முறை ஓணம் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. அங்கு வசிக்கும் மலையாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் ஓணம் திருவிழாவின் முக்கியமான ஓணம் விருந்து படைக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். மலையாளிகள் படைத்து இருந்த ஓணம் விருந்து சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்பட பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் மலையாளிகள் வீடுகளில் விருந்துணவை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஓணம் பண்டிகை யையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் ஏராளமான பூக்களை வரவழைத்து இருந்தனர். மேலும் பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலை குறைத்து தான் விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் கேரள மக்கள் பெருமளவில் வராததால் பூ மார்க்கெட்டுகள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயி களும், பெருமளவில் விற்ப னையை எதிர்பார்த்து இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
- அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.
ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்
இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி
தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Annapoorna #Coimbatore #AnnapoornaCoimbatore pic.twitter.com/UuXQ0W86Ro
— Annapoorna (@Annapoorna_Cbe) September 14, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்