என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
- இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.
கோவை:
கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..
தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.
தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
- உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.
நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.
உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.
இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.
இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.
- மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.
- இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது.
இதில், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது. இந்த மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.
இந்நிலையில், காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவிற்கு வருகை தர பதிவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மியா சகி மா மரக்கன்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம் என்றும் காவேரி கூக்குரல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய மியா சகி மா மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம்.
இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவில் பங்கேற்க
இன்றே பதிவு செய்யவும் என்றும், குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்..
https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8 அல்லது 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
- சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது.
- முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழை ரகங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது.
இதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்களும் பண்ருட்டி முன்னாள் வேளாண்மை துணை இயக்குனர் அக்ரி.பி. ஹரிதாஸ் அவர்களும் பங்கேற்று பேசினர்.
இதில் தமிழ்மாறன் அவர்கள் பேசியதாவது:-
பருவ நிலை மாற்றத்தால் முக்கனி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வழக்கத்தைவிட மா, பலா, வாழையின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 30% இந்தாண்டு குறைந்துள்ளது.
ஒரு பயிர் சாகுபடியை விடுத்து, பலப்பயிர் பல அடுக்கு முறையில் உணவுக்காடாக உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்கலாம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது. அதுவும் குறிப்பாக பழ மரமாக இருந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும், சுற்றுச்சுழல் மேம்படும், நிலம் வளமாகும் மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இத்தோடு விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும்.
எனவே, விவசாயிகள் தங்களிடம் எவ்வளவு நிலம் இருந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியில் உணவுக்காடு உற்பத்தி செய்ய வேண்டும். நிலமே இல்லாவிட்டாலும் மாடியில் கூட உணவுக்காடு சாத்தியம் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைகாகவும் வைக்கப்பட உள்ளது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
- யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.
இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மரப்பட்டடைகள், பழங்கள், உள்ளிட்டவை மூலம் சாராயம் தயாரிக்கப்படுவதில்லை. முழுக்க, முழுக்க ரசாயனங்களை கொண்டு தான் சாராயம் தயாரிக்கப்படுகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கும், அதை அழிப்பது குறித்தும் தீர்வு காண வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.
நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களது உறவினர்களுக்கு தான் பணம் கொடுக்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் நிராதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு தான் நிவாரணம் வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. ஆனால் கள்ளுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே.
கள்ளுக்கடைகளுக்கு என தனி லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதில் தனி கவனம் செலுத்தப்பட்டு முறைப்படுத்தினால் மதுவிலக்கு சாத்தியம் தான்.
கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை பீகார் மாநிலம் நிரூபித்து காட்டியுள்ளது. கேரள அரசு அதற்கான முயற்சியில் உள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
- வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கோவை:
கள்ளக்குறிச்சி மாவட்ம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலாவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிகளவில் சேர்த்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
- இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
வடவள்ளி:
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களையும் செய்தார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஆசனங்களை செய்தனர்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா என்பது ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்க செய்தார். உலக நாடுகள் அனைத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
மனதிற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கும் யோகாவை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான வெயில் காணப்பட்டது.
மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழைக்கு வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக, வால்பாறையில் உள்ள ஆறுகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டி தீர்த்த கனமழையால் வால்பாறை பகுதியில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. மழை பெய்ததால் கடும் குளிரும் காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
- 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ந் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22, 23, 24 கலந்தாய்வு நடைபெறும்.
இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி திறக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
- சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.
கோவை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.
சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.
அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.
அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?
அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்