search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    • கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9.38 சதவீதம் வாக்குகளும், 11 மணி முதல் 1 மணி வரை 36.10 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    1 மணி முதல் 3 மணி வரை 47.12 சதவீத வாக்குகளும், 3 மணி முதல் 5 மணி வரை 57.53 சதவீத வாக்குகளும் பதிவாகியது. கோவை மாவட்டத்தில் இறுதி நிலவரப்படி மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சூலூரில் 75.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    பல்லடம் சட்டசபை தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை தெற்கில் 59.25 கவுண்டம்பாளையத்தில் 66.42 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியிலேயே சூலூரில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஆனால் வழக்கம் போல மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

    சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது.

    அங்கும் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    • வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
    • பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.

    ராம்நகர்:

    கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை.

    * ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை.

    * கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.

    * வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

    * பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.

    * பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
    • உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    கோவை தொகுதியில் 50.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.

    அங்கப்பா பள்ளி பூத் எண் 214-ல் 523 ஓட்டு மட்டுமே உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே எஞ்சியோரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுத்தார்.

    • வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    கோவை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
    • கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

    கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்களுக்கு சொந்தமாக 3½ ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே திடீரென நின்று விட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராம மக்கள் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தங்கள் ஊரின் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகைகள் வைத்தனர்.

    இன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.

    மேலும் கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் கிராமத்திற்கு உட்பட்ட பொகலூர் 58-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.

    • அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதானது.

    கோவை:

    கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தி சென்றனர்.

    ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதாகவும் தொடங்கி நடந்தது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் 184-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்திரத்தில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இங்கு காலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எந்திரம் பழுது காரணமாக அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியிலும் எந்திரம் பழுதானது.

    இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்போது வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இதேபோல் போத்தனூர் 59-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. இதுமட்டுமின்றி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அதனை ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து, வாக்குப்பதிவை நடத்தினர்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
    • கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி உள்ளனர்.

    கோவை:

    தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி (எ) க. பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.

    மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு G Pay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.




     


    • திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
    • உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கோவை:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
    • 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணை உள்ளது. இந்த அணையையொட்டி ஆழியார் பூங்கா உள்ளது.

    இது கோவையின் சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு, பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து தங்கள் பொழுதை கழித்து செல்வது வாடிக்கையாகும். இதனால் ஆழியார் அணை பூங்காவில் எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    ஆழியார் அணையை சுற்றி பார்த்து விட்டு, அவர்கள் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமுக்கும் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக நாளை ஆழியார் அணை பூங்கா மற்றும் பொள்ளாச்சி டாப்சிலிப் முகாம் மூடப்படுகிறது. அங்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்
    • நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்

    கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

    எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.

    கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.

    நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    • மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது.
    • எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    ஏப்ரல் 19-ந் தேதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு.

    இந்த முறை பா.ஜ.க.வை விரட்டி அடித்து விட்டு, இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கப்போகிறது. 39-க்கு 39 வெற்றி நாம் தான் வெற்றி பெற போகிறோம்.

    மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.65-க்கும் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படும், கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும். நகை தொழில் புத்துயிர் பெறுவதற்கு புதிய சிட்கோ பூங்கா அமைக்கப்படும், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் ஆய்வு மையம் அமைத்து தரப்படும். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்.

    2021-ல் தமிழக மக்கள் எல்லாரும் வாக்களித்து, ஆதரித்து, இவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தனர்.

    தவழ்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கடைசியில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரின் காலையும் வாரி விட்டதுடன், அவர் யார் என்று கேட்டவர் தான் பழனிசாமி.

    சசிகலாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் பண்ணியவர் தான் எடப்பாடி பழனிசாமி. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் பா.ஜ.கவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

    இப்போது தேர்தல் வந்ததும். பா.ஜ.க.வுடன் இருந்தால் நமக்கு வரக்கூடிய 10 ஓட்டுகளும் வராது என்பது தெரிந்ததும், நாங்கள் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள். அவர்களின் நாடகத்தை மக்கள் யாரும் நம்பி விடாதீர்கள்.

    2021-ல் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஒன்றே ஒன்று பண்ணினார். எல்லாரும் விளக்கு ஏற்றுங்கள். மணி அடியுங்கள். மணி அடித்தால் கொரோனா வைரஸ் ஓடி விடும் என்று சொன்னார். அதனை தவிர வேறு எதனையும் அவர் செய்யவே இல்லை.

    ஆனால் நமது முதலமைச்சர், கொரோனா காலகட்டத்தின்போது கோவைக்கு வந்து, இங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்ததுடன், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் தைரியமாக சென்று ஆய்வு செய்தவர் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வாக்குறுதியாக பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைப்பேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதன்படியே ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு சொன்னதை செய்து காட்டினார். அதேபோல் ஆவின் பால் விலையையும் ரூ.3 குறைத்து நடவடிக்கை எடுத்தார்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்தார். இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ் தான். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், திருநங்கைகள் அனைவருக்கும் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இப்போது அந்த பஸ்சை யாரும் பிங்க் பஸ் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. திராவிட மாடல் அரசின் வெற்றி. அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருவது பெரிய விஷயம் அல்ல. அதனை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியமானது.

    பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரி படிக்க செல்ல வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். கோவையில் ஒவ்வொரு மாதமும் 17 ஆயிரம் மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நமது முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது தான் காலை உணவு திட்டம். தரமான காலை உணவு கொடுத்து, தரமான கல்வியை கொடுப்பது தான் நமது திராவிட மாடல் அரசு. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

    இந்த திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. கோவை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 80 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    இதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இன்னும் 5 மாதங்களில் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைத்து தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும்.

    10 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது செய்துள்ளரா? கொரோனா பாதிப்பு, சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமர் தமிழகத்திற்கு வந்து மக்களை சந்தித்தரா? வரவே இல்லை.

    தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை கொடுத்தது. மத்திய அரசிடம் பேரிடர் நிதியை கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவரை இனிமேல் பேரை சொல்லி அழைக்காதீர்கள். 29 பைசா என்று தான் சொல்லி அழைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி வரி, கூட்ஸ் அண்ட் சர்வீஸ் வரி கட்டுகிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு அதனை பகிர்ந்து நமக்கு ஒரு ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தருவது 29 பைசா தான். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதலாக கொடுக்கிறது.

    பிரதமர் மோடி போகிற இடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நடத்தும் பிரதமரை மக்கள் ரோட்டிற்கு தான் அனுப்ப போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் புகுந்தது. நீட் தேர்வால் இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என தி.மு.க.வும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தியும் நெல்லை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சேர்ந்து காலி செய்து விட்டனர். பா.ஜ.கவின் பொய் பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது.

    பிரதமர் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மட்டுமே அவர் வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் அவர் நாடகம் ஆடி வருகிறார். 2019-ல் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என கூறியிருந்தனர். ஆனால் இன்று வரை மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கவில்லை.

    தி.மு.க. தலைவர், தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் எங்களுக்கு தூக்கம் இல்லை. மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதில் இந்தியா கூட்டணி ஜெயிக்க தமிழகம் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.

    இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.

    இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.

    ×