search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகரில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 18 கார்களில் வந்தவர்கள் உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பு தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பார்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மது கூடத்திற்கு மது அருந்த வருவோர், கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய பார் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது அருந்த பார்களுக்கு வருபவர்கள், வேறு போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனரா? என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

    பார்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன் மதுக்கூட உரிமமும் ரத்து செய்யப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

    இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

    அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம்.
    • பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆன்மிக பூமி அப்போது அவர் கூறியதாவது:-

    பழனியில் இன்று நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

    தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என காந்தி கூறியது போல பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இவர்கள் அண்ணாவின் தமிழை பின்பற்றும் இவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

    நடிகர் விஜயின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மரமா என தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துகளை சொல்கிறார்கள். தம்பி விஜய் சட்டரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

    பா.ஜ.க., திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.

    அ.தி.மு.க.வால் பா.ஜனதா வெற்றி பெற்றதா? அல்லது பா.ஜனதாவால் அ.தி.மு.க வெற்றி பெற்றதா? என்றால் அது பெரிய விவாதம்.

    கூட்டணி என வரும் போது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது.

    இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.

    பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிகல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
    • பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு காவல் பணிக்கு தனியார் செக்யூரிட்டி மூலம் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரி நுழைவுவாயில், பல்வேறு சிகிச்சை பிரிவு வார்டுகள், அரங்குகள் உள்பட பல்வேறு இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காவலர்கள் தங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவது போன்று சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஒப்பந்த காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களை அரசு மருத்துவமனை உள் மருத்துவ அலுவலர் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை கடிதமாக எழுதி தாருங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    • கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி முதல்வரின் இ மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

    அதில் கோவையில் உள்ள உங்கள் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோவையில் உள்ள பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவை பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் என்பவர் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தனியார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.

    உடனடியாக போலீசார் மாணவர்களை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விட்டு சோதனை மேற்கொண்டனர். பள்ளியில் உள்ள கழிப்பறைகளிலும் சோதனை செய்தனர்.

    ஆனால் அங்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்தே வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது.

    இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ-மெயில் வந்த முகவரியை வைத்து, அந்த நபர் யார்? என கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசு பள்ளியில் 7,8, 9-ம் வகுப்புகளில் படித்து வரும் 9 மாணவிகளுக்கு அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள் அதனை கண்டு கொள்ளாமல், அதற்கு உடந்தையாக இருந்தாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா அளித்த புகாரின் பேரில் போலீசார் இடைநிலை ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் சம்பவம் தெரிந்தும், புகார் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பெண்டு செய்யப்பட்டு விட்டார்.

    அதனை தொடர்ந்தே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    • ஆசிரியரின் அட்டூழியத்தை மூடி மறைத்த தலைமை ஆசிரியர்.
    • 3 பேர் மீது நடவடிக்கை? கல்வி அதிகாரிகள் விசாரணை

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது அந்த பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் (வயது 54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த தாகவும் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இடைநிலை ஆசிரியர் நடராஜ், பிரச்சனை தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் மீது சிறுமுகை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் இச்சம்ப வத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் நடராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த பிரச்சினை தெரிந்தும், நடவடிக்ைக எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைதான ஆசிரியர் நடராஜனின் அட்டூழியத்தை மூடிய மறைத்தது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    போக்சோ வழக்கில் கைதாகி உள்ள நடராஜன் இதற்கு முன்பாக அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பள்ளியில் பணியாற்றி வந்ததும், அப்போது அங்கும் இதே போன்று எழுந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறைக்கு சென்று பின்னர் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே கிருஷ்ண கிரியில் பள்ளி ஒன்றில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆசிரியர் கைதாகி உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
    • அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பீளமேடு:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

    நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் யானை மடுவு, அட்டுக்கல், குப்போபாளைம், நரசீபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு நுழையும் யானைகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், வள்ளியம்மன் கோவில் வீதி அருகே உள்ள ஆர்.வி.எஸ். தோட்டம் பகுதிக்குள் நுழைந்தது.

    இந்த தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார்.

    தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், வீட்டின் அருகே சென்றதும், அங்கிருந்த சிமெண்ட் சீட்டை உடைத்து தூக்கி எறிந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையை தூக்கி எறிந்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்ட, பாண்டியம்மாள் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது 2 யானைகள் வெளியில் நின்றிருந்தன. இதை பார்த்ததும் அச்சத்தில் உறைந்த அவர்கள் சத்தம் எழுப்பினர்.

    இவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், வெளியில் யானை நிற்பதை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து அங்கு முகாமிட்டு இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் சைரன் எழுப்பி, அங்கிருந்த விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 யானைகளில் ஒரு யானை ஆவேசம் அடைந்து, முன்னேறி வந்து, தன்னை விரட்டுபவர்களை துரத்தியது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் யானை அருகில் செல்ல பயந்து, சற்று தூரத்தில் நின்றபடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்ற யானை, அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. அப்போது அங்குள்ள வெள்ளிங்கிரி என்பவரது வீட்டின் ஜன்னல் கதவை பிடித்து இழுத்து சேதப்படுத்தியதுடன், அருகே இருந்த மின் கம்பத்தையும் இடித்து கீழே தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று, அடிவார பகுதியில் நின்று கொண்டன.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனத்திற்குள் செல்ல மறுத்து, ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மின் விளக்குகள் சரியாக எரியாததால் இரவில் வெளியில் வரவும் அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளா மாநிலத்தில் நலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

    நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

    ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    • சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை.

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அழிந்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, சிவராமன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிவராமன் தலைமறைவானார்.

    இந்நிலையில், கோவையில் சிவராமன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது தப்பி ஓடிய அவர், தடுமாறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை என்றும் போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    பேரூர்:

    கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சம்பவத்தன்று குடி போதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அங்குள்ள தெருவில் 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தார். அந்த சிறுமிக்கு சாக்லெட் தருகிறேன் என்று கூறி தனது வீட்டுக்கு கூட்டி சென்றார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லை. தொடர்ந்து சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுமி வீட்டுக்கு சென்று தாயிடம் நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார்.

    இதனை கேட்ட பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரின் வீட்டுக்கு திரண்டு சென்றனர். ஊர்மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அவர் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரை சுற்றி வளைத்து பிடித்து பேரூர் போலீஸ் நிலையத்துக்கு கூட்டி சென்றனர்.

    அந்த நேரத்தில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது. மேலும் பேரூர் போலீசார் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதில் தயக்கம் காட்டினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் பேரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×