search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன.இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை தொடங்கினார்கள்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி, கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஊழியர் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சுமார் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி பயிர் முழுவதும் சேதமானது.புவனகிரி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுதும் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. அது மட்டுமின்றி முரட்டு வாய்க்கால் எனப்படும் பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் வழியாக வயலில் இருக்கும் நீர் மழை காலங்களில் வடிவது வழக்கம். இந்த வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு சில காலதாமதம் ஏற்படுகிறது.

    இதனால் புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்கு திட்டை, வடக்கு திட்ர்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். முரட்டு வாய்க்கால் வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வடிகால் வாய்க்கால் முழுவதும் சம்பு, ஆகாயத்தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழப்பீடு தரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

    கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியைஅயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ராகுல் என்கிற கிருஷ்ணா (16).இவர் பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிபாளையம்பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

    இன்று காலை கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார் அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது .இதில் சம்பவ இடத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் நின்றது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வழக்கத்தை விட அதிகமான மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் மழைநீரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி சென்றனர்.

    ஆனால் தண்ணீருக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயங்காமல் நின்றது . இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, தள்ளிக்கொண்டு வெளியேறினர் . இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டு போக்குவரத்ததுக்கு தடை விதிக்கப்பட்டது. . இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் தண்ணீர் வடிந்ததும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    • கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.
    • கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் திருப்பாதிரிப்புலியூரில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாடி கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் பாழடைந்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் பூட்டிய நிலையில் இருந்து வந்தது . இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை பாந்து இருந்த கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.

    அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடிந்த சுவரை சுற்றி இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து இடிந்து விழுந்த கட்டிடஇடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். மேலும் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் . கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

    எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 33), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டை சேர்ந்த நளினி (26) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ம் நளினிக்கு நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்ற நளினி, கணவன் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் வாழப்பட்டை சேர்ந்த பாலாஜி (25) என்ற வாலிபரை நளினி 2-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார் நளினி, அவரது 2-வது கணவர் பாலாஜி, நளினியின் தந்தை கண்ணன், நளினியின் தாயார் லதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த வந்த நிலையில் கனமழையாக மாறியது. இதனை தொடர்ந்து விடிய விடிய மழை தொடர்ந்து வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 17 சென்டி மீட்டர், லால்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சாரி 10.9 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு குடியிருப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டு வருகின்றது. மேலும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது. இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் சூழ்ந்தால் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- 

    சேத்தியாதோப்பு - 168.4,லால்பேட்டை - 110.0,கொத்தவாச்சேரி - 109.0, ஸ்ரீமுஷ்ணம், - 107.1,புவனகிரி - 88.0, காட்டுமன்னார்கோவில் - 87.0, வேப்பூர் - 85.0,கலெக்டர் அலுவலகம் - 77.4, பரங்கிப்பேட்டை - 76.8, பெல்லாந்துறை - 74.5,கடலூர் - 69.5, குறிஞ்சிப்பாடி - 66.0,கீழ்செருவாய் - 64.0, சிதம்பரம் - 63.1,வடக்குத்து - 63.0, அண்ணாமலைநகர் - 58.0,தொழுதூர் - 58.0, லக்கூர் - 52.3, விருத்தா சலம் - 50.2,குப்பநத்தம் - 46.4, காட்டுமயிலூர் - 45.0,எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 40.0, மீ-மாத்தூர் - 38.0, வானமாதேவி - 30.6, பண்ருட்டி - 16.௦  மாவட்டத்தில் மொத்தம் 1,743.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது. மேலும் காலையில் சந்திர சேகர் சாமி வீதியுலா, மாலையில் பஞ்சமூர்த்தி வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விழாவான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வாமன புரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலையில் வாமனபுரீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பித்து தேர்த்திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து முக்கிய மாடவீதியில் உலா வந்து மீண்டும் தேர் நிலை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. கார்த்திகை மாதம் பிரம்ம உற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி )நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற உள்ளது. பின்னர் நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் எதிர்புறத்தில் உள்ள மலை மீது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று பக்தி முழக்கத்துடன் ரோகிணி தீபம் ஏற்றப்படும் . இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு ரோகிணி தீபத்தை சுற்றி வந்து வழிபடுவார்கள். 29 -ந் தேதி பிரம்ம உற்சவ விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×