search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.


    சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.

    விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.
    • தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் காடுகளையும் காடுகளையொட்டிய வாழ்வியலை உள்ளடக்கய பூமி. தமிழ் நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் நிரம்பியிருந்தாலும் முல்லை பூமியாக இருக்கிறது. இங்கு ஆதிகாலம் தொட்டே கால்நடைகளை மேய்பதும், வளர்பதும், மேட்டு நிலங்களை பண்படுத்தியும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலத்தில் பொங்கல் திருவிழா காலம் காலமாக ஆட்டுப்பட்டி பொங்கல் மாட்டுப்பட்டி பொங்கல் என பட்டிப் பொங்கல் மிக பிரசக்தி பெற்றது.

    ஆடுகளை காட்டில் மேய்ந்துவிட்டு வந்து அடைக்கப்படும் பட்டியிலும் விவசாயமாடுகள் வாழும் வீடான பட்டியிலும் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் இந்த மண்ணில் பொங்கல் திருவிழாவில் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கலை வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.

    தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு. இப்போது வாழ்வியலை புத்தகத்தில் பதிவு செய்வது போல அக்கால கல்வெட்டில் ஆட்சியாளர்களை பற்றிய குறிப்புகளும் தாம் வாழும் காலத்திய அடையாளங்களையும் கல்வெட்டில்பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் உழவுத்தொழில் செய்யும் கல்வெட்டு இருப்பது ஆச்சரியம்தானே!

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் சாலையில் இருக்கிறது அளேபுரம்.

    குளத்தங்கரையை தாண்டி அளேபுரத்திற்கு செல்லும் வழியில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இந்த கல்வெட்டில் ஏர் உழும் காட்சியை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே ஏர் உழுதலை போன்ற கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

    பொங்கல் திருநாளில் உழவுக்கு உதவிய மாடுக ளுக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில் இந்த கல்வெட்டிற்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

    • ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    காரிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 34). இவர்களுக்கு சரண் (14), தீரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஜோதி பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது கணவர், மகன்களுடன் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோதி, இளைய மகன் தீரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறத்தனர்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த சரணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதியமான்கோட்டை-ஓசூர் வரை தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி அதிக வேகத்தில் வந்துள்ளது. மேலும் சாலையில் போடப்படும் சென்டர் வெள்ளை கோடு இன்னும் போடப்படாத காரணத்தால் டிரைவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    விபத்தில் தொழிலாளியின் மனைவியும், மகனும் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

    தருமபுரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து, அரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்தை நிறுத்தாமல், பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஊர்வலமாக பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை வரை நடந்து சென்றனர்.

    அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.


    தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, தொ.மு.ச.வை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோன்று பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கையில் தொழிற்சங்க அடையாள அட்டையை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.

    தருமபுரி:

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

    தருமபுரி அரசு போக்குவரத்து மண்டலத்துக்குட்பட்ட தருமபுரி, பொம்மிடி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட 14 பணிமனைகள் உள்ளன.

    இதில் மண்டலத்திற்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 853 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில் தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் அனைத்து பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    இதேபோன்று பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் புறநகர் பஸ்கள் 24, டவுன் பஸ்கள்-23, மாற்று பஸ்கள்-4 என மொத்த 51 பஸ்கள் இன்று வழக்கம் போல் இயங்கி வருகின்றன.


    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 900-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் அரசு டவுன் பஸ்கள் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் 100, புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் 45 பஸ்களும், ஓசூரில் இருந்து 74 சாதாரண பஸ்கள் , 76 சொகுசு பஸ்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களும், புறநகருக்கும் இயக்கப்பட்டன.

    இதேபோல் தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காவேரிப்பட்டனத்தில் வழக்கம் போல அனைத்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் வழக்கம் போல குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கின.

    இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.

    • தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

    தருமபுரி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் என் மனம் என் மக்கள் நடைப்பயணத்தை நேற்று மதியம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கி தொடர்ந்து பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலயம், பென்னாகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தருமபுரியில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து 4 ரோடு வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோது மாவட்ட பொருளாளரும், நிகழ்ச்சி பொறுப்பாளருமான ஐஸ்வரியம் முருகன் அண்ணாமலை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    பின்னர் நடைபயணத்தை முடித்துவிட்டு பொதுமக்களிடத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம்.

    இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

    தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது.


    பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும் தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தின் உற்பத்தி திறனை 1.7 சதவீத வளர்ச்சியில் இருந்து 5 சதவீதமாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும் போது 5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர்.

    2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.

    2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

    இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பென்னாகரத்தில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஐஸ்வரியம் முருகன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.

    தருமபுரி:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்ற பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    கடந்த மாதம் 6-ம் தேதி அன்று கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று ஆஜாராக உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவரது உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணகுமார், மாணிக்கம், தனபால் ஆகிய 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர்.

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஜனவரி 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
    • சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி:

    பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரெயில், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக செல்ல இருப்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு குறைந்த நேரத்தில் சுமூகமான மற்றும் விரைவான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளும் வகையில், வருகிற 30-ந் தேதி முதல், 'வந்தே பாரத்' ரெயில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவையிலிருந்து அதிகாலை, 5.00 மணிக்கு புறப்படும், 'வந்தே பாரத்' ரெயில் திருப்பூர் நிலையத்துக்கு காலை 5.42 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 6.27 மணிக்கும், சேலத்திற்கு, 7.20 மணிக்கும், தருமபுரிக்கு 8.32 மணிக்கும், ஓசூருக்கு 10.05 மணிக்கும் சென்றடையும். கடைசியில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தை காலை 11.30 மணிக்கு அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஓசூருக்கு மதியம் 2.52 மணிக்கும், தருமபுரிக்கு மாலை 4.16 மணிக்கும், சேலத்திற்கு 5.53 மணிக்கும், ஈரோட்டிற்கு 6.45 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.25 மணிக்கும், கோவைக்கு, 8.00 மணிக்கும் சென்றடையும்.

    இந்த ரெயிலில், 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

    கோவை-பெங்களூரு, 'வந்தே பாரத்' ரெயிலுக்கான கட்டண விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்ட தருமபுரி ரெயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த ரெயில் இன்று கோவையில் இருந்து சேலம் வழியாக 8.15 மணிக்கு வந்தது. பின்னர் 8.19 மணிக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரெயில் தருமபுரி ரெயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் உற்சாகம் அடைத்தனர்.

    • நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.
    • ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து சரிவு காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதியிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

    • சாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது.
    • சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

    தருமபுரி:

    பென்னாகரம் அருகே உள்ள ஆளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். அப்போது சாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது.

    அப்போது சாமி சிலையை சொர்க்க வாசல் வழியாக கொண்டு வந்தபோது பக்தர்கள் சிலையை தோளில் வைத்து ஊஞ்சலில் ஆடுவதுபோல் அசைத்தனர்.

    அப்போது முறையாக வாகனத்தில் சாமி சிலையை கட்டவில்லை என்பதால், பாதி தூரத்திலேயே, சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது. இதனால் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

    பின்பு மீண்டும் முறைப்படி சாமி சிலை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு சாமி சிலை உரிய முறையில் ஊர்வலம் செல்லும் நிலையில் வைக்கப்பட்டது.

    சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளை தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியது.



    • அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார்.
    • அகிலனை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்ன தாலுகா, நன்னை மேற்கு தெருவில் வசித்து வருபவர் அழகப்பன் மகன் அகிலன் (வயது28).

    சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அகிலன் நேற்று முன்தினம் தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாவுக்காக வந்தார்.

    இந்த நிலையில் அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும்போது அகிலன் கரை மீது ஏறி குதித்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.

    அப்போது அகிலன் தண்ணீரில் அசைவின்றி மிதந்து கிடந்தார்.

    இதை பார்த்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×