search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகு நல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரகு வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.

    இதையடுத்து மனவேதனையில் இருந்த ரகு வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் வீதி உலா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலம் மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சப்பரம் முன்பு படுத்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என வேண்டி கொண்டனர்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஊருக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் பரிசலில் அக்கறை தத்தப்பள்ளி மற்றும் உத்தண்டியூரில் திருவீதி உலா நடந்தது.

    இதில் சாலைகளில் வழி நெடுக பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    • கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
    • கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த நிலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும். இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது கோடை வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தார் ரோடு செல்லும் பகுதிகளிலும் மேட் விரித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.38 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் (104.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்து உள்ளனர். இதேபோல் நீர்ச்சத்து ஆகாரங்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    • நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான்.
    • எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் செயல்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு துணி ரகங்கள் நெசவு செய்யப்படுகிறது. பெட்ஷீட்கள், படுக்கை விரிப்புகள், திரை சீலைகள், தலையணை உறை, துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி வகைகள், மேட் ரகங்கள், துணி பைகள், மேட் ரக பைகள், சால்வை ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் மக்கள் விரும்பும் விதமாக நெசவு செய்யப்படுகிறது.

    இதில் குறிப்பாக சென்னிமலை பகுதி கைத்தறிகளில் கோரா நூலில் நெசவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரிண்ட் செய்யப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரை சீலைகள் 25 வருடங்களாக விற்பனை தொய்வில்லாமல் நடந்து வருகிறது.

    நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான். இங்கு பிரிண்ட் செய்யப்படும் துணி ரகங்கள் உலக புகழ் பெற்றவை.

    இதை சென்னிமலை படுக்கை விரிப்புகளில் புகுத்த 25 வருடங்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் முடிவு செய்து சென்னிமலையில் கைத்தறியில் உற்பத்தியாகும் கோரா நூல் துணி ரகங்களை அனுப்பி அங்கு பிரிண்ட் செய்யப்பட்டு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள், திரை சீலை ரகங்கள் அறிமுகம் செய்தனர்.

    இந்த ஜெய்பூர் பிரிண்ட் ரக துணிகள் நல்ல விற்பனை ஆனது. அதை தொடர்ந்து 25 வருடங்களாக புது புது வண்ணங்கள், தற்போதுள்ள இளம் தலைமுறையினறும் விரும்பும் டிசைன்கள் பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது.

    25 வருடங்களாக ஜெய்பூர் ரக பிரிண்ட படுக்கை விரிப்புகளை பிரிண்ட் செய்து கைத்தறி சங்கங்களுக்கு கொடுக்கும் ஜெய்பூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் பட் கூறும்போது:-

    எங்கள் ஜெய்பூர் பிரிண்ட் துணிகளில் மிக நேர்த்தியான பிரிண்ட் செய்கிறோம், இயற்கை சாயம் கொண்டு ஆர்க்கானிக் முறையில் பிரிண்ட் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சரும பிரச்சனைகளை உண்டாக்காது.

    மேலும், எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம். இந்த ரக பிரிண்ட் படுக்கை விரிப்புகள் வண்ணம் பளபளப்பாக இருக்கும். துணிகளை துவைப்பது எளிது. மேலும் எத்தனை சலவை செய்தாலும் சாயம் போகாது. மினுமினுப்பு தன்மை குறையாது.

    இதனால் கடந்த 25 வருடங்களாக இந்த படுக்கை விரிப்புகள் மவுசு குறையாமல் சென்னிமலை பகுதி கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொய்வில்லாமல் நடக்கிறது என்றார்.

    எந்த துணி ரகங்கள் ஆனாலும், 25 வருடங்களாக விற்பனையினை குறிப்பாக ஒரு தலைமுறை தாண்டியும் மவுசு குறையாமல் வைத்திருப்பது போற்ற தகுந்தது தான். அப்படிதான் சென்னிமலை கைத்தறி ஜெய்பூர் பிரிண்ட் ரக படுக்கை விரிப்புகளும் மவுசு குறையாமல் உள்ளது.

    தற்போது வரும் தீபாவளி விற்பனையினை கருத்தில் கொண்டு புதிய ரக ஜெய்பூர் பிரிண்ட் படுக்கை விரிப்புகளை உருவாக்க கைத்தறியாளர்கள் சோதனையினை தொடங்கி உள்ளனர்.

    • இரவு பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் படிக்கட்டின் கீழ் மின்வாரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு இந்த பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் பாம்பை தேடினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்வாரிய அலுவலகப் பொருட்கள் அடியில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே கொண்டு வந்தார். அது சாரைப்பாம்பு. 8 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை லாபகமாக பிடித்த யுவராஜ் வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஒரு வீட்டின் படிக்கட்டில் இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார். ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பையும் அவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறும்போது,

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும். அதை போன்று பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அடிப்பகுதியில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.

    சி.ஏ.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.

    உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம், பொய் புரட்டு தான்.

    மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார். திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரை பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதலமைச்சர் செய்திருக்கின்றார்.

    போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதைத்தடுக்க அ.தி.மு.க. தவறி விட்டது. தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
    • விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

    தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

    இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.

    விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.69 அடியாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடிவரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கனஅடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 19 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.02 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.22 அடியாகவும் குறைந்து உள்ளது.

    • விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த குமார் (60), மூலக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம் (60), சவந்தரராஜ் (60), இண்டியன்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன் (55), காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (50), ஈரோட்டை சேர்ந்த மனோகர் (50) ஆகியோர் இன்று காலை 6 மணி அளவில் ஆம்னி வேனில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி மலை 27-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பி கொண்டிருந்தபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கரும்பு லோடு உடன் கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டு அலறினர். விபத்து குறித்து தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு காரில் படுகாயம் அடைந்த மூலகிணறு பகுதியை சேர்ந்த செல்வம், சவுந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மனோகர் ஆகியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இந்த விபத்தில் நம்பியூரை சேர்ந்த குமார், இந்தியன் பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன், காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஈரோடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படுகாயமடைந்த 3 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×