என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மதுரை
- நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம்.
- தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
மதுரை:
மதுரையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மதுரையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
கட்டுமான பராமரிப்பு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 212 பணிகளை 1015 கோடி ரூபாயில் 281 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளை எடுக்கப்பட்டு தற்போது 200 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்.
அதேபோல் இந்த நிதியாண்டில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 30 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் சிறப்பாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். மதுரை மாவட்டத்தில் மட்டும் தரைமட்ட பாலங்கள், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருவழி சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று இருக்கிறது.
தி.மு.க. அரசு 234 தொகுதிகளிலும் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் இருக்கிறது.
பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி திகழ்கிறது. மதுரையில் முக்கிய சந்திப்புகளாக இருக்கக் கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் ஒரு பாலம். அதேபோல் அப்பல்லோ மருத்துவமனை அருகே ஒரு பாலம் என 2 பாலங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பால கட்டுமான பணிகள் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும்.
நடிகர் விஜய் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை தடுக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போய்விட்டது.
விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.வின் நோக்கமல்ல. நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். புதிய கட்சிகளை தொடங்குவது ஜனநாயக உரிமை. தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது.
- ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை.
மதுரை:
மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.
நடிகர் விஜயின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.
ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் தடுக்காமல் தவறிவிட்டது
முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
- சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.
"பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்" என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
- 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
உசிலம்பட்டி:
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாமல், ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியை தர மறுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மழலையர் முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட தேவைகள் இந்த நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சகவீதம் மாநில அரசு பங்கும் உள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.3,586 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை நான்கு தவணையாக வழங்கப்படும். முதல் தவணையான ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கப்பட வேண்டும், ஆனால் செப்டம்பர் மாதம் பிறந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை இணைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இணைந்த பின்பு தான் நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் மத்திய கல்வி துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழக கல்வித்துறை அமைச்சரோ புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லை என்று கூறுகிறார்.
இன்றைக்கு கல்விக் கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் கொண்டு, நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த கடமையும் ஆற்றவில்லை. கல்வி நிதியில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு புதிய திட்டத்திற்கு மட்டும் ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2,214 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது அது ரூ.1,978 கோடியாக சுருங்கிவிட்டது.
மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.25 கோடியாக ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், கடலூர் கடற்கரை சாலைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, கோவை போன்ற மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, ஆனால் கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி இல்லை, ரெயில்வே துறைக்கு நிதியில்லை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, வளர்ச்சிக்கு நிதி இல்லை, வறட்சிக்கு நிதி இல்லை என தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யலாமா? மத்திய அரசு நிதி தரவில்லை, அதைப் பெற்றுத்தர மாநில அரசுக்கு வக்கில்லை. இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சராக ஆவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாநில நிர்வாகிகள் துரை தனராஜன், வெற்றி வேல், டாக்டர் விஜயபாண் டியன், நகர செயலாளர் பூமா ராஜா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம் பட்டி ரகு, காசிமாயன், மகேந்திரபாண்டி, சிவசக்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.செல்வகுமார், சிந்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
- வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.
அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
பின்னர், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலைக் கடத்தலுக்கு உதவியாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடுன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிம்னற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- வயதான பெற்றோரை முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
- நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள் ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் கோர்ட் டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அங்கிட் திவாரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வாரம் தோறும் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. இது உடல் மற்றும் மனரீதியாக அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அதிக செலவையும் ஏற்படுத்துவதாக உள்ளது. வயதான பெற்றோரையும் முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிட் திவாரிக்கு நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவார். எனவே நிபந்தனையை தளர்த்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வாரம் ஒரு முறை திங்கட்கிழமை கையெழுத்திடுவதை 2 வாரத்திற்கு ஒருமுறை திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.
- மதுரை எய்ம்ஸ் தொடர்பான பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
- மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மதுரை:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..?" என்று ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது.
கொரோனா 2022-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
- நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.
மதுரை:
மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தற்போது பெண்கள் அதிக அளவில் படித்து முன்னேறுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களாக பெண்களே இருப்பார்கள்.
அந்த அளவுக்கு பெண்கள், மாணவிகள் அதிகமாக படிப்பின் மீது கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்கள் என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 4,000 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. வணிக வரித்துறையில் இந்த ஆண்டு இலக்காக ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு 23 ஆயிரம் கோடி என்று வைத்திருக்கிறோம். எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். மேலும் கல்விக்கடனை வங்கிகள் அதிகமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். வெகு விரைவில் எதிர்பாருங்கள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார். வருகின்ற செப்டம்பர் 9-ந்தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
- கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.
மதுரை:
மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.
இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.
எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார்.
- நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ். இவரது மனைவி அபிநயா. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேசிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தற்போது வரை நகையை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
- தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்