என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீலகிரி
- ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மலை ரெயில்களில் குடும்பத்துடன் பயணித்து வழியோரம் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர்.
மேலும் கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும்.
- இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து, ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிந்ததாலும், 23 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
23 நாட்களுக்கு பிறகு இன்று ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவை தொடங்கியது.
- கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா(வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி யாஸ்பின்(47). இவர்களுக்கு இம்ரான்(27), முக்தார்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது-நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது உடல், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் காபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார், இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனை அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதை அவரது பெற்றோரால் கொடுக்க முடியவில்லை.
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்து உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
இதையடுத்து இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-ம் போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டனர்.
கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளது.
இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் நீலகிரி பூண்டு உச்சபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 400 முதல் 300 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.
சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால் நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது.
- வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
ஊட்டி:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனால் வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேசன் கடைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை ஆகிய இடங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.
மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரேசன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை தூக்கி வெளியே வீசியுள்ளது.
இதில் கடையின் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்களும் சேதமாகின. இதனால் அருகே உள்ள கட்டிடத்தில் பொருட்களை மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்டு யானை சேதப்படுத்திய ரேசன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சீரமைக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டும் சேதப்படுத்தி ஷட்டரை உடைத்தது.
இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:-
மசினகுடி ரேசன் கடையை பாதுகாக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலை, இரும்பு கேட்ட, இரும்பு ஷட்டர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
- வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.
தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.
இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.
அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.
- சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
- மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியிலுள்ள உலகப்புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை ஆகிய தொடா் விடுமுறையையொட்டி ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள வானுயா்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண-வண்ண மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா்.
மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி உற்சாகமாக படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள், தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகிறது.
மேலும் ஊட்டிக்கு வந்து செல்பவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னுார்-ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
- குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.
சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.
பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.
எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
- மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஊட்டி:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.
ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.
27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
- ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி 'சீல்' வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
ஆனால் யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 'சீல்' வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து, தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. விசாரணை குழுவின் உத்தரவுப்படி, மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை, அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
- குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றும் மழை நீடித்தது.
காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இன்று அதிகாலை குன்னூரில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் எம்.ஆர்.சி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் மண் திட்டுகள் இருக்கும் பகுதிகளில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
- சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
ஊட்டி:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.
மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.
2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.
3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்