search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 36). இவர் சென்னை அருகே உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்பிரசாத்தின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர், அருண்பிரசாத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

    அதன்படி அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்பிரசாத் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் நேற்று காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. வீட்டு முன் நிறுத்தப்பட்டி ருந்த பைக் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சசிகுமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பைக் தொடர்பாக சோளிங்கர் தாலுகா ஆயல் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 21)என்பவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெரு, பெரிய தெரு, வண்ணாரப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்குவதை தவிர்க்க மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர்மழையின் காரணமாக, மழை நீருடன் கலந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றத்தை வீசுகிறது.

    அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சுகாதார சீர்கடி ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன்,பொறியாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் கொய்யாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அன்னதானம் நடைபெற்றது
    • முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி பாலா பீடத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதியில் 25-வது கந்த சஷ்டி விழா தொடங்கியது.அன்னை பாலாவுக்கும், வள்ளி தெய்வயானை உடனுறை முருகனுக்கும் பாலாபீடத்தில் நிர்வாகி மோகன்ஜி ஷண்முக தீபம் ஏற்றி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஆராதனையை செய்தார்.

    கந்த சஷ்டி விழாவுக்காகவே பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி எழுதி, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம், சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் என்ற இசைகுறுந்தகட்டின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது. குருஜி பாபாஜி சண்முக மந்திரம் ஓதினார்.

    விழாவுக்கு திரளாக வந்த அன்பர்களுக்கு வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிறைவாக பாலாபீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது.

    • ரூ.20 லட்சம் மதிப்புள்ளது
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த முசிறி சாலையில் தனியார் கல்குவாரி உள்ளது.

    இந்த தனியார் கம்பெனியில் பாறை உடைப்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பிரேக்கர் எனப்படும் எந்திரம் திருட்டு போய்விட்டதாக வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருட்டு போன பாறை உடைக்கும் எந்திரத்தை தேடி வந்தனர்.

    இதில் திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் (வயது 31) என்பவர் பாறை உடைக்கும் எந்திரத்தை மினிவேனில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரிடம் இருந்து எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியின் அவசரக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோபிநாதன், துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடப்பு ஆண்டில் அம்மூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்ப ட்டுள்ளது.

    இதன்படி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளை தேர்வு செய்ய கணக்கெடுப்பு பணிகள் மேற்கொ ள்வது, நீர் நிலைகள், நீர்வ ரத்து கால்வாய் பணிகள் மேற்கொ ள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பலகாரம் செய்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் வடகால் கிராமம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 70).

    இவர் நேற்று தீபாவளி பண்டிகையில் வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மீது தவறி விழுந்தார்.

    இதில் முத்தம்மாள் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1¼ கிலோ கைப்பற்றினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் வசித்துவரும் ஆரோக்கியம் என்பவர் மகன் கிளிண்டன் என்கிற வினோத்குமார் (வயது 24). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்திருப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்.

    வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிளிண்டனை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு பாராட்டு
    • நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டங்கள் குறித்து பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி வரவேற்று பேசினார்.

    இதில் வாலாஜா வக்கீல்கள் சங்கத் தலைவர் இளங்கோவன்,வக்கீல்கள் ஸ்ரீதரன், விஜயகுமார், செந்தில் குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய சட்ட விளக்கங்களை அளித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு நீதிபதி மகாசக்தி, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். முடிவில் சட்டப்பணி குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • ரூ.9 லட்சம் பறிமுதல்
    • 2 பேருக்கு வலைவீச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(40), பைனான்சியர். இவர் கடந்த 7-ந் தேதியன்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பைனான்ஸ் கலெக்சன் பணம் ரூ.15 லட்சத்துடன் தனது காரில் அம்மூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் கத்தாரிகுப்பம் கிராம வனத்துறை செக் போஸ்ட் அருகே கார் சென்ற போது பின்னால் வந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் 4 பேர் வேகமாக வந்து கையில் கத்தியுடன் சரவணன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து, கத்தியை காட்டி சரவணன் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் மர்ம நபர்கள் சென்ற கார் வயல் வெளியில் இறங்கி விட்டதால் காரை அங்கேயே விட்டு விட்டு 4பேரும் பணத்துடன் தப்பி விட்டனர்.

    சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    மர்ம நபர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின் பேரில் , போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் ,ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், சஞ்சீவிராயன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர் போன்ற பகுதிகளில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கார் உரிமையாளரிடம் , அவரது நண்பர்கள் வேலைக்காக காரை எடுத்து செல்வதாக கூறி எடுத்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று பொன்னை அடுத்த அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 2 வாலிபர்களை சிப்காட் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    அவர்கள் பெங்களூரை சேர்ந்த எல்லப்பா(28) சென்னவீரப்பா(22) என தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து எல்லப்பா, சென்னவீரப்பா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9லட்சத்து 40ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பூட்டுத்தாக்கில்‌ உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை
    • மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலை கலெக்டர் வளர்மதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலகுப்பம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், பள்ளி மற்றும் கல்லூரி ,வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் மேலகுப்பம் சாலை உள்ளது.

    சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது மேலகுப்பம் சாலையில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு மது அருந்துவதும், மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மது கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும், பா.ம.கவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதில் பா.ம.க.வின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வக்கீல். ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×