search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு மரபுப்படி ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க இயலவில்லை. மேட்டூர் அணையின் வரலாற்றில் 61-வது ஆண்டாக குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விட இயலாத ஆண்டாக 2024 அமைந்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு ஆகிய கூட்டங்கள் நடைபெறுகின்றன, தமிழகத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லியும் விதிகளை எடுத்துக் கூறியும் கர்நாடக அரசு செவிசாய்க்க மறுத்து தமிழகத்தின் உரிய உரிமை தண்ணீரை விடுவிப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை பயிரிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இலக்குகளை மீறி 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு இந்த மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தரிசாக போடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதைப்போலவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமாகும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இம்மாத இறுதிக்குள் நடவு செய்யப்பட வேண்டும் . இனி நாற்று விட்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். தற்போதுள்ள நிலையில் மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.

    இந்த சூழ்நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,366கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 40.29 அடியாக உள்ளது. நீர் இருப்பு 12.340டி எம்.சியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றே அதிகரித்து 3,341 கன அடியாக உள்ளது. வழக்கம்போல குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள சூழலில் வற்புறுத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கைகள் எடுத்து சம்பா சாகுபடியை உறுதிப்படுத்தி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    • 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
    • மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சை:

    திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர் கடந்த 6-ந் தேதி தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 6 ஐம்பொன் சிலைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். 6 சிலைகளும் பழங்கால புராதானமிக்க சிலைகள் ஆகும். இதில் திரி புராந்தகர் சிலை 3 அடி உயரம் கொண்டது. வீணா தார தட்சிணாமூர்த்தி சிலை 2.75 அடி உயரம் உடையது. மேலும் 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 6 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரை ஓட்டி வந்த, சேலம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42), மயிலாடுதுறை கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (64) , ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளீயானது.

    லட்சுமணன், 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது இந்த 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அதனை அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

    மேலும் இதுகுறித்து அவர் தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், லட்சுமணனின் மருமகனான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திரு முருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தனர்.

    3 பேரும் இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது.

    அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.

    இந்த வேளையில் இந்த சிலைகள் கிடைத்த விவரமும், சிலைகள் வெளி நாட்டுக்கு கடத்தப்படும் விவரமும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியதகவலாக கிடைத்தது. இதை தொடர்ந்து 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

    இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான 3 பேர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.
    • நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி முதன்மையானதாக விளங்கி வருகிறது.

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக வயல்களில் நெல் நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வயல்களில் நடவு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாரம்பரிய நெல் ரகங்களை அறிந்து கொள்ளவும், நடவு பணிகளில் ஆர்வம் ஏற்படவும் நடவு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, தஞ்சை அருகே உள்ள கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய முறையில் நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் நாற்று நடுவது எப்படி? என்று கற்றுக்கொடுத்தனர்.

    இதையடுத்து 'அம்மா முத்துமாரி, அழகு முத்து மாரி, ஆனந்தமாய் கொண்டாடுவோம் அழகு முத்துமாரி' என நாட்டுப்புற பாடல்களை பாடியபடி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நாற்று நட்டனர். தொடர்ந்து, ராஜமுடி, சொர்ன சீரிகை உள்பட 56 நெல் ரகங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறும் போது:- நாட்டுப்புறப் பாடல் பாடியபடி நாற்று நட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம் .

    இளைய தலைமுறை விவசாயத்தை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். நஞ்சில்லாத உணவை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும் என்றனர்.

    • சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர்.
    • கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.

    ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர்.

    இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

    நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.

    இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு.

    தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தலையில் மண்பானையை கவிழ்த்து கொண்டு அதில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியப்படி கலெக்டரிடம் நூதன முறையில் மனு கொடுத்தனர்.

    விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்தும் 2022-23-ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் வழங்கவில்லை. 2023-24 பயிர் காப்பீடு செய்தும் இன்சூரன்ஸ் வழங்கவில்லை. எனவே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே சென்றனர். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

    மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.

    தஞ்சாவூா்:

    தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கரூர்-திருச்சி ரெயில் வழித்தடத்தில் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண்-16812) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூரில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறைக்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 4.45 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் புறப்படும்.

    இதேபோல், திருச்சி-ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்-06809) திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, நாளை (திங்கட்கிழமை) மாலை 5.10 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.40 மணிக்கும் புறப்படும். 27-ந்தேதி பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் (வண்டி எண்-16844) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.
    • நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது.

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. குறுவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட வேண்டுமென்ற ஒருவரை மத்திய ஜல்சக்தி இணையமைச்சராக்கி உள்ளனர். 

    நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு, ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை.

    தோல்வியை சந்திக்காத அரசியல் எது ? 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ என்ட்ரி என்கிறார்.

    2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்.

    அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ். மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ்.

    அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
    • அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தூரில் இன்று ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கா னூர்பட்டியில் விபத்து கால அதிதீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பல லட்சம் செலவு ஏற்படுவதால் ஏழை மக்களுக்காகவே முதலமைச்சர் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த மையத்தின் அனுபவங்கள், செயல்பாடுகள் வைத்து அடுத்தகட்டமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கிண்டியில் அரசு இயற்கை மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
    • கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.

    எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    திருவையாறு:

    காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விடபடவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்யமண்டப படித்துறை அருகே காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தஞ்சை நெற்களஞ்சிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நடுவ நிறுவனா் அரு.சீா். தங்கராசு தலைமை வகித்தாா்.

    இதில், காவிரி ஆற்றில் காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் மாப்பிள்ளை சம்பா நாற்று நட்டு வைக்கப்பட்டது. மேலும், காவிரித்தாய் படத்துக்கு பூஜைகள், தீபாராதனைகள் செய்து, காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×