search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • தென்காசியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    • இந்த விபத்தால் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (27), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), வேல் மனோஜ் (29), முகேஷ் என்ற மனோ (27) இவர்கள் 5 பேரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இதில் முகேஷ் என்ற மனோவின் அக்காள் கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் (27). இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    இவர்கள் 6 பேரும் நேற்று இரவு குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் மீண்டும் ஊர் திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டி வந்தார்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் முருகபாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில், லாரி புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிபட்டிக்கும், புன்னையாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஷ், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ராஜா மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

    அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பிரகாசை போலீசார் கைதுசெய்தனர். விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து லாரியில் கேரளாவிற்கு சிமெண்டு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெகு தூர பயணம் என்பதால் இன்று அதிகாலை தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வந்த போது லாரி டிரைவர் பிரகாஷ் கண் அயர்ந்து தூங்கி உள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக லாரி மோதி உள்ளது. இதனால் 6 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

    இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புளியங்குடியில் இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை புரிந்த தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் பாவூர்சத்திரத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி எம்.பி. தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களாக பாய், போர்வை, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும், பொதுக்கூட்ட மைதானத்தில் மகளிரணியுடன் இணைந்து 100 கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் தாங்கிய கட்சி கொடிகளை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போரா ட்டங்களை சந்தித்துள்ளது. இந்தி மொழியை திணிக்க கூடாது. மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் மீது திடீரென அக்கறை உள்ளது போல பா.ஜ.க.வினர் திருக்குறள் பற்றி பேசுகின்றனர். கவர்னர் தத்துவம் சொல்கிறார்.

    சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்பு பகுதியை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்கள். மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு தரவில்லை.

    கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை மக்கள் மாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். தமிழக உரிமைகள், மொழி பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    • ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சியின் 2-வது வார்டில் ராமலெட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, பா.ஜனதா-4, சுயேட்சை-2, காங்கிரஸ்-1 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில் ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நகராட்சி கூட்டங்களின்போது அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி தலைவி ராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் வழங்கினர்.

    அந்த வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நகராட்சி பொறுப்பு கமிஷனரான கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் சுகந்தியிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர், நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று (18-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு கமிஷனர் (பொறுப்பு) சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் தொடங்கியது.

    இதில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால் போதிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சுகந்தி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ராமலெட்சுமியின் நகராட்சி தலைவர் பதவி தப்பியது.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
    • மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.

    மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    • வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
    • பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மல்லிகை பூ போலவே பிச்சி பூ, கனகாம்பரம் கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).

    இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.

    தென்காசி:

    செங்கோட்டை-நெல்லை வழித்தடமானது 1904-ல் மீட்டர் கேஜ் ஆக தொடங்கப்பட்டு 2012-ல் அகல பாதையாக மாற்றப்பட்டு 16 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

    விரைவில் இயங்க இருக்கும் ஈரோடு-செங்கோட்டை ரெயிலையும் சேர்த்து தற்போது 6 தினசரி ரெயில்களும் ஒரு வாரம் மும்முறை ரெயில், ஒரு வாராந்திர ரெயில் உட்பட 8 ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    அதைப்போல 60 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-திருச்செந்தூர் வழித்தடமானது 1923-ம் ஆண்டு மீட்டர் கேஜ் வழித்தடமாக தொடங்கப்பட்டு 2009-ல் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 10 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 7 தினசரி ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இரு வழித்தடங்களிலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார என்ஜின் கொண்டு தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை-நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழிதடங்கள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை நேரடி ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை-நெல்லை திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.


    அதைப்போல திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மற்றும் மதியம் 4.25-க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயிலை நேரடியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதால் ரெயில் இயக்கத்தில் எந்த இடையூறும் இருக்காது. மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட முருக பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

    தற்போது திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் திப்பணம்பட்டியை சேர்ந்த முருக பக்தர் வேல்முருகன் கூறியதாவது:-

    சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி பெருந்திருவிழா உள்ளிட்டவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூர் சென்று வருகிறோம். செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே கூடுதல் பெட்டிகள் இணைத்து செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
    • இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர்நகர் 3-ம் தெருவை சேர்ந்தவர் சங்கரமகாவிங்கம். இவரது மனைவி சிவஞானம்மாள். கணவன், மனைவி இருவரும் மிகவும் பாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சிவஞானம்மாள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று காலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே மனைவி இறந்ததை தாங்கி கொள்ள முடியாத அவர் இன்று காலை உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக அக்கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    • குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் குற்றாலத்தில் வந்து பிரசாதம் வழங்குவதற்காக சிப்ஸ், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழம் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைக்கவே அவர் குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

    இதன் தொடர்ச்சியாக 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு டன் பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பழங்களை ஊழியர்கள் உதவியுடன் அழிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    ×