search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.
    • தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அங்கு அவர் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரட்டுமலை சோதனை சாவடி பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் காரை செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ஜான்பாண்டியன் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது.
    • குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் தென்காசியின் கூலகடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாக்கடை நீர் கலந்து தெருக்களில் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார்.
    • அமித்ஷா வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார். இதற்காக நாளை சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருகிறார்.

    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு நாளை மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கும் அமித்ஷா அங்கிருந்து நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.

    தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதியான ஆசாத் நகர் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கும் அமித்ஷா அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 1.15 மணிக்கு காரில் மீண்டும் ஹெலிபேடு சென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக அதே ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

    முதலில் அவர் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அதாவது ஆசாத் நகர் தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையிலும் 'ரோடு-ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

    சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரது வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அமித்ஷா வந்திறங்கும் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அமித்ஷா 'ரோடு-ஷோ' செல்லும் சாலையிலும் போலீசார் ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அவர் ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
    • 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணம் சாலையில்

    வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் நபர் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நாக ராஜா(35) என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

    மேலும், அதில் 2 குண்டுகளை சுரண்டையை சேர்ந்த மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளை கடந்த 30-ந்தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து சுரேஷ், நாகராஜா, கார்த்திக், மனோ சங்கர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

    இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

    • தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (50).

    நேற்று மாலை மாரியப்பன் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக லட்சுமணன் வீட்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாரியப்பனை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கிருஷ்ணசாமி அறிவித்தார், இதனையொட்டி, டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
    • குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×